Saturday, January 12, 2008

வரலாற்றுப் பிழைகள்

இந்தப் பதிவு திரைப்படங்களைப் பற்றியது.

வழக்கம் போலவே கேள்வியும், பதிலும் ...

பொழுதுபோக்கினைத் தவிர்த்து திரைப்படங்கள் நம் அன்றாட வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையா ?

நிச்சயமாக !!

ப்ரான்ஸ்வா த்ரூபோ எனும் திரைப்பட மேதை, ''வாழ்க்கையை விட திரைப்படம் மேலானது'' என்கிறார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது ''அரிச்சந்திரா'' நாடகமே.

காமராஜர், பக்தவச்சலம் போன்ற ஒரு சிலரைத் தவிர தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்த அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கிறது.

இவை எல்லாற்றுக்கும் மேலாக, இன்னமும் நம் மக்களில் பெரும்பான்மையோர் திரைப்படங்களையும், திரைப்பட கதாபாத்திரங்களையும் தங்கள் வாழ்வின் பிம்பம் என்றே கருதுகின்றனர்.

ஆக திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு வலிமையான சாதனமாக தங்களை நிரூபித்திருக்கின்றன.

இது மாற்றுக் கருத்தில்லாத உண்மை.

முதலில் இதிகாசங்களையும், புராணங்களையும் மட்டுமே கதைக்களங்களாக கொண்டிருந்த திரைப்படங்கள், நாளடைவில் சமுதாய அவலங்களையும், நாட்டு நடப்புகளையும் கருவாகக் கொள்ள ஆரம்பித்த போது, நிஜமாகவே சமூகத்தில் நல்ல அதிர்வுகளை உருவாக்கின.

ஆனால் இன்றைய நவீனகாலத் திரைப்படங்கள் மெல்ல மெல்ல தங்களின் அடையாளங்களை இழந்து வருவதாகத் தோன்றுகிறது.

அளவுக்கு மீறிய ஆபாசமும், வன்முறையும் மட்டுமே பிரதான கதைக்களங்களாக மாறிவிட்ட நிலையில், இன்னும் கூடுதலாக,
சில திரைப்படங்களில் நம் வரலாற்றையும், காவியங்களையும் திரித்து கேலிக்கூத்தாக்கும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.

இந்தப் பதிவின் அடிப்படையே நண்பர் அபிராமி சுட்டிக்காட்டிய ஒரு திரைப்படக்காட்சியும், அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்விகளும்தாம்.

பார்த்திபன் கனவு எனும் திரைப்படத்தில், வருகிற ஒரு நகைச்சுவைக் காட்சி.

நடிகர் விவேக், இயக்குநர் மனோபாலா இருவரும் மகனும் தந்தையுமாக நடித்திருப்பார்கள். படத்தில் மனோபாலா ஒரு ஆசிரியர். மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவனிடம்

'' கண்ணகி மதுரையை எரித்தாள்; மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது. இது என்ன காலம் சொல்லு '' என்று வினவுவார்.

அப்போது குறுக்கிடும் விவேக்,

'' பாண்டியன் கோவலனைக் கொன்னது கண்ணகியோட பெர்சனல் மேட்டர், அதுக்கு ஏன் கண்ணகி மதுரையை எரிக்கணும் ? நீங்க இப்படி சொல்லிக் குடுக்கிறதாலதான் நாளைக்கு இவன் (மாணவனைப் பார்த்து) பெரிசானதும், ஏதாவது பிரச்சனைன்னா உடனே பஸ்ஸை எரிக்கிறான்'' என்பார்.

அதைக்கேட்ட மாணவனும் மனோபாலா தவறாக கற்றுக் கொடுப்பதாக சொல்லி, வகுப்பைவிட்டு வெளியேறுவதாக காட்சி அமைந்திருக்கும்.

இதை மேலோட்டமாகப் பார்த்தால், விவேக் பாணியிலமைந்த வழக்கமான, '' கருத்து '' சொல்வது போன்ற ஒரு நகைச்சுவைக்காட்சி தான்.. ஆனால் இதில் நெருடலான விசயம், கண்ணகி மதுரையை எரித்த நோக்கத்தையும், நிலையையும் திரித்துச் சொல்லியிருப்பது.

நண்பர் எழுப்பிய வினாக்கள் இவைகள்தாம்..

>> தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிற கண்ணகியை, ஒரு சுயநலமிக்க மூன்றாம்தரப் பெண்ணாகச் சித்தரிப்பதா ?

>> நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் வன்முறையைத் தீர்வாக சொல்கிற காவியமா ?

>> கண்ணகி மதுரையை எரித்ததையும், தன் தலைவருக்குத் தரப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று மாணவிகளைக் கொளுத்திய நிகழ்வையும் ஒரே பார்வையில் கொள்வதா ?

இந்த வினாக்கள் முற்றிலும் நியாயமானவை. கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவையும் கூட..

ஏனென்றால் ஒரு காவியத்தையோ, வரலாற்றினையோ முற்றிலும் புரிந்து கொள்ளாமல், விமர்சிப்பதோ, அதனை மக்கள் மேடைக்கு எடுத்து வருவதோ, மிகப்பெரிய தவறு.

அதிலும் திரைப்படங்களைப் போன்ற வலிமையான ஊடகங்களில் வரலாற்று நிகழ்வுகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை.

இந்த நகைச்சுவைக்காட்சியில் சித்தரிக்கப்படுவதைப் போல சொந்த நலத்திற்காகவா கண்ணகி சினம் கொண்டாள் ? இல்லை. மதுரையை எரித்த கண்ணகியின் கோபம் வேறுவகையானது.

பாரதி சொல்வானே,

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா !!
மோதி மிதித்துவிடு பாப்பா !! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !! என்று.

அதைப்போல, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நியாயமான கோபம் கண்ணகியினுடையது.

பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்த கண்ணகிக்கு பாண்டிய மன்னனாலேயே அநீதி இழைக்கப்பட்டது.

" மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி " எனும் மொழிக்கேற்ப தவறான நீதி சொன்ன மன்னன் ஆட்சி செய்யும் நகரமும் அநீதிகளின் உறைவிடமாகவே இருக்கும் என்பதாலேயே கண்ணகி மதுரையை எரிக்கத் துணிந்தாள்.

இன்னும் சொல்லப் போனால், மதுரையை எரித்திடுமாறு அக்னிக்கு ஆணையிடும்போதே யாரையெல்லாம் தவிர்த்திட வேண்டுமென்ற பட்டியலையும் சேர்த்தே தருகிறாள்.

சிலப்பதிகாரத்தில், மதுரைக்காண்டத்தில் வஞ்சின மாலையில் வருகிற அந்தப் பாடல் இதோ !! :

பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

பொருள் : அந்தணர், அறவழி தவறாதவர்கள், பசுக்கள், பத்தினிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டுத் தீயவர்களை மட்டும் எரித்திடுக எனக் கோபம் கொண்டு கண்ணகி ஏவ, கூடல் நகராகிய மதுரையைப் புகை மண்டிற்று.

நம்முடைய எல்லா இலக்கியங்களும் நல்ல விசயங்களைத்தான் தாங்கியிருக்கின்றன. நாம் தான் அவற்றைச் சரியாக புரிந்து கொள்வதோ, பயன்படுத்துவதோ இல்லை.

இந்த காட்சி ஒரு சோற்றுப் பதம் மட்டுமே ! இதைப் போல இன்னும் எத்தனையோ ஊடகங்களில் வரலாற்றுப் பிழைகள் மிச்சமிருக்கின்றன !!

போனது போகட்டும் !!

இனிமேலாவது

>> படைப்பாளிகள் தங்களுக்குரிய சமூகப் பொறுப்பையுணர்ந்து, சரியான கருத்துக்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.

>> நகைச்சுவையோ, பாடல் காட்சியோ அல்லது வேறு வசனங்களோ இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பதாயின், தணிக்கைக்குழு, அவற்றின் ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

>> இது அவசியமானது - நாம் எந்த ஊடகத்திலேயாவது, ஏதாவது ஒருவகையில், நமது வரலாறோ, கலாச்சாரமோ, இலக்கியமோ, தவறாகச் சொல்லப்பட்டால் உடனடியாக குரலெழுப்ப வேண்டும்..

நினைவிருக்கட்டும் !! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வைத்திருப்பதை, நமது தலைமுறையிலா தொலைப்பது ????

Friday, January 4, 2008

பதினாறு பேறுகள் !!

உற்சாகமான கொண்டாட்டத்துடன் புத்தாண்டு பிறந்து விட்டது.

இந்த தடவை என்னுடைய புத்தாண்டுக் கொண்டாட்டம் லண்டனில்.

தேம்ஸ் நதிக்கரையின் ஓரத்தில், பிக் பென் கடிகாரம் பன்னிரண்டு அடித்ததும் வண்ண விளக்குகள் ஒளிர, பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்த கொண்டாட்டம் விடியும்வரை நீண்டது. ஒரு புதிய அனுபவம்.

வழக்கம் போலவே புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய ஏராளமான மின்னஞ்சல்களை நண்பர்கள் அனுப்பியிருந்தனர்.

அதிலும் நண்பர் ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக இந்தப் புத்தாண்டில் பதினாறு பேறுகளையும் பெற வேண்டுமென்று வாழ்த்தியதுடன் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்தியிருந்தார்.

நம்ம ஊர்த் திருமணங்களில் மணமக்களைப் '' பதினாறும் பெற்று வாழ்க '' என வாழ்த்துவதைக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. இந்த பதினாறு பேறுகள் என்பவை வழி வழியாகச் சொல்லப்படுவையா ? அல்லது நம் இலக்கியங்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான பட்டியல் ஏதேனும் உண்டா ? என்று .

நண்பருடைய மின்னஞ்சலின் உந்துதலால் இந்த சந்தேகம் மீண்டும் உயிர் பெற, நம் இலக்கியங்களை அலசத் தொடங்கினேன்.

சற்று தேடலுக்குப்பின் இந்தப் பாடல் கிடைத்தது.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வராத நட்பும்
குன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஓர்
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அறி துயிலும் மாயனது தங்கையே !
ஆதிக் கடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி !
அருள்வாமி அபிராமியே !!

திருநாவுக்கரசர் திருக்கடவூரில் உறைந்திருக்கும் அபிராமி அன்னையின்மேல் பாடிய பதிகம் இது. இந்தத் திருக்கடவூர் மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அமுதீசர் - அபிராமி அன்னை ஆலயம் மிகப் பிரசத்திப் பெற்றது. அமுதீசர் அருளால் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதை பெற்றது இத்தலத்தில்தான். அபிராமி பட்டர் திருக்கடவூர் அபிராமி அன்னையின் மீது 100 பாடல்களைக் கொண்ட அந்தாதி பாடியுள்ளார். சரி, தலபுராணம் போதும். இனி பாடலைப் பார்க்கலாம்.

இந்தப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பதினாறு செல்வங்களையும் நான் புரிந்து கொண்டபடி இங்கே தருகிறேன்.

1 கற்றும் மறக்காத கல்வி
2 நீண்ட ஆயுள்
3 குறையாத இளமை
4 நோயில்லாத உடல்
5 வஞ்சனையில்லாத நட்பு.
6 சோர்வில்லாத மனம்
7 அன்புள்ள மனைவி
8 நல்ல சந்ததி (சந்தானம் - சந்ததி, பரம்பரை )
9 குறையாத புகழ்
10 உண்மை - சொல் தவறாமை
11 தடையில்லாத கொடை
12 செல்வம்
13 நீதி தவறாத குணம்
14 துன்பம் இலாத வாழ்வு.
15 மாறாத பக்தி
16 பெரியவர்களின் கூட்டு

என் நண்பர் அனுப்பியிருந்த பதினாறுக்கும், இந்தப் பட்டியலுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அவருடைய பட்டியலின் மூலம் எதுவென்று தெரியவில்லை. அறிந்ததும் வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

( பின்னிணைப்பு :

பதினாறு பேறுகளில் ஒன்றாக சொல்லப்படும் '' அன்புள்ள மனைவி '' மற்ற எல்லாவற்றையும்விட முக்கியம் போலும். (அனுபவஸ்தர்கள் உறுதி செய்யவும் ;-) )

ஏனென்றால் இதே கருத்தை வலியுறுத்தும் மேலும் ஒரு பாடல். ஔவையார் பாடியது.

கொடிது கொடிது
கேட்கின் நெடுவடிவேலோய் !

கொடிது கொடிது
வறுமை கொடிது

அதனினும் கொடிது
இளமையில் வறுமை

அதனினும் கொடிது
ஆற்றொணாக் கொடுநோய்

அதனினும் கொடிது
அன்பிலாப் பெண்டிர்

அதனினும் கொடிது
இன்புற அவர்கை உண்பதுதானே !!

பொருள் - உலகத்திலேயே கொடியது அன்பில்லாத மனைவியின் கையால் தினமும் உண்பது தான்.

எத்தனை பேருக்கு இக்கொடுமை வாய்த்திருக்கிறதோ ?? :-))