மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவிட நேரமும் அவசியமும் வாய்த்திருக்கிறது.
மார்ச் 8 - உலக பெண்கள் தினம்.
கடந்த சில வருடங்களாகவே மேலை நாடுகளில் கொண்டாடப் படுவதைப் போல் புதிது புதிதாக பல தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அம்மாதிரியான தினங்களில், தொலைக்காட்சிகளில் என்ன சிறப்புத் திரைப்படம் என்பதில் தான் அக்கறையோடிருக்கிறோமே தவிர அந்த நாளின் சிறப்பு என்ன ? வரலாறு என்ன ? என்பதையெல்லாம் நம்மில் பெரும்பன்மையோர் நினைத்துப் பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முயல்வதில்லை.
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியுமா ?
சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
பெண்கள் போராடி பெண்களுக்கான சில உரிமைகளைப் பெற்றதுதான் மகளிர் தினம்.
1789ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி பிரஞ்சுப் புரட்சியின் போது, பாரிஸில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உரிமை பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. அந்நாடுகளில் உள்ள பெண்கள் அனைவரும் உரிமைக்காக தொடர் போராட்டங்களை நடத்தினர். இறுதியில் ஆளும் வர்க்கம் அசைந்து கொடுத்தது.
பிரான்சில், இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் எனும் அரசன், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து 1857 இல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள் அது! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர் அமெரிக்கப் பெண்கள். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
அன்று வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கிய பெண்கள் இன்றுவரை தங்களின் உரிமைகளைப் பெறவும் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
என்ற மகாகவியின் வரிகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளாக மண்ணுக்குள் அழுத்தி வைக்கப்பட்ட நிலக்கரி வைரமாய் மின்னுவதைப் போல ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டிருந்த பெண்ணினம் இன்று பல துறைகளிலும் வைரமாய் மின்னிக் கொண்டிருக்கின்றனர்.
இது நிச்சயமாக நாம் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ள வேண்டிய சாதனையாகும்.
அதேசமயம், கவலையளிக்ககூடிய ஒரு விஷயம், சமுதாயத்தில் சரிநிகர் உரிமையும், வெற்றியும் கண்ட பெண்கள், குடும்ப வாழ்வில் இன்னமும் அடக்குமுறைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். .
சமீபத்தில் படித்த ஒரு புள்ளிவிபரம், நம் நாட்டில்... 26 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் அவமானப்படுத்தப் படுகிறாள்! 54 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். !
ஒவ்வொரு ஆண்டும் 15000 இளம் மனைவிகள் எரித்துக் கொல்லப்படுகின்றனர் என்கிறது இன்னொரு சர்வே.
இவ்வாறாக பெண்களுக்கான அடக்குமுறைகள் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஹேமா தேஷ்பாண்டே எனும் சமூகசேவகி, "எனக்கு எல்லா நாளுமே பெண்கள் தினம் தான்... ஒவ்வொருநாளும் நான் போராடவேண்டி உள்ளது, சவால்களை சந்திக்கவேண்டி இருக்கிறது" என்கின்றார்.
பண்டிகைகள், சுதந்திர தினம், குடியரசுதினம் என அந்தந்த தினங்களின் உயர்வைப் போற்றுகிறோம்; அந்த நாளிற்கான பின்னணியை நினைவு கொள்கிறோம்; அதைப் போலவேதான் இந்த மகளிர் தினமும்.
இதுபோன்ற தினங்களிலாவது பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
கடந்த மகளிர் தினத்தில், தமிழீழத் தலைவர் பிரபாகரன் சொன்ன ஒரு கருத்தை இங்கே தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும். "
ஆம்!! ஆண்-பெண் சமத்துவம், சமுதாயம், குடும்பம் என எல்லா தளங்களிலும் மலரும் போது, இந்த உலகம் நான்கு பக்கமும் நீரால் மட்டுமல்ல சந்தோசத்தாலும் சூழப்பட்டிருக்கும்.
இந்த நல்ல நாளில் நாம் அனைவரும் அந்த உன்னத நிலையை அடைய உறுதி கொள்வோமாக !!
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா !!
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment