Thursday, May 8, 2008

நளவெண்பா கதை

பெயர்க்காரணம்:

காலையில் எழுந்ததும் நினைக்கத் தகுந்தவர்களில் நளனும் ஒருவன் என்கிறார் வாரியார் சுவாமிகள். அத்தகைய சிறப்புமிக்க நளனது சரித்திரத்தைக் 'கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாறும் வேட்ப' க்கூறும் நூலாகையால் நளவெண்பா எனப் பெயர் பெற்றது.

கதைச்சுருக்கம்:

நிடத தேசத்து வேந்தனாகிய நளன் கல்வி கேள்விகளில், வீர தீரத்தில் தன்னிகரற்றவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். சமையல் கலையில் கைதேர்ந்தவன். இன்றைக்கும் கூட சிறந்த சமையலைப் பாராட்டும்போது நளபாகம் என்கிறோம்.

விதர்ப்ப தேசத்து இளவரசியாகிய மங்கை தமயந்தி அன்றலர்ந்த மலர் போல் அழகும் பொலிவும் கொண்டவள். நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனும் நால்வகை குணங்களையே, தேர், குதிரை, யானை, காலாள் எனும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும், நல்வழி நடத்திச் செல்கின்ற அமைச்சர்களாகவும், காலில் அணிந்துள்ள சிலம்பே பேரிகையாகவும், வேற்படையும், வாள்படையுமே இரு கண்களாகக் கொண்டு பெண்மையினை ஆட்சி புரிகின்ற பெண்ணரசியாவாள்.

இத்தகைய சிறப்புமிக்க தமயந்தியின் குணநலன்களை அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன் அவள்பால் காதல் கொண்டான். தன் உள்ளக்கிடைக்கையை அன்னத்தின் வாயிலாக தமயந்திக்குத் தூதாக அனுப்பினான்.

அன்னம் நளனது ஆண்மைச்சிறப்பையும், ஆட்சித்திறமையையும், அறிவுக்கூர்மையையும், பண்பினையும் சொல்லக் கேட்ட கணம் முதலே, தமயந்தி தன் உயிரை அவனுக்கு உயில் எழுதினாள். உண்மைதான், அன்பெனும் பெருவெள்ளத்தின் முன் யார்தான் எதிர்த்து நிற்க முடியும் !!

இந்நிலையில், தமயந்தியின் சுயம்வரத்திற்கு அவளது தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். நளனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்திரன் முதலான தேவர்களும், இடர் செய்யும் கலியும், பல நாட்டு வேந்தர்களும் கூடியிருந்தும், தமயந்தி நளனுக்கே மாலையைச் சூட்டினாள்.

இதனால் கோபம் கொண்ட கலி, நளனுக்கும், தமயந்திக்கும் பல்வேறு துன்பங்களை விளைவித்து இருவரையும் தனியாக்கினான். காலம் முழுதும், நிரந்திரமாகச் சூரியனை மறைத்திடும் வலிமை மேகத்தின் கைகளுக்கு இல்லை அல்லவா ? எந்தப் பிழையும் செய்யாத குற்றமற்றவனான நளன் நீண்ட சோதனைகளுக்குப் பின், தமயந்தியுடன் இணைந்து நீண்ட காலம் நல்லாட்சி புரிந்தான்.

இதுவே நளவெண்பாவின் சாரம். நளனைப் பற்றி வேறு பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சிவமகாபுராணத்தில் நளனது முற்பிறப்பு பற்றிக் கூட விவரிக்கப்பட்டுள்ளதாக, வாரியார் சுவாமிகள் தனது "சிந்தனைச் செல்வம்" நூலில் குறிப்பிடுகிறார். இது இன்னொரு தனிப் பதிவிற்கான குறிப்பு. சிவமகாபுராணம் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் நளனது முற்பிறப்பு பற்றிய கதையினைத் தனியே பதிவிடுகிறேன்.

நூல் அமைப்பு:

நளவெண்பா மூன்று காண்டங்களை உடையது.

சுயம்வர காண்டம் - இக்காண்டம் முழுமையும், காதலும், இன்பமும், அழகியலும் விரவிக் கிடக்கின்றன. நளனும், தமயந்தியும் காதல் வசப்படுவதும், சுயம்வரத்தின் மூலம் தமயந்தி நளனைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுப்பதும் மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. நிடத நாட்டு வளமும் விதர்ப்ப தேசத்துச் சிறப்பும் அழகான உவமைகள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது 168 வெண்பாக்களைக் கொண்டது.

கலிதொடர் காண்டம் - சுயம்வரத்தில், தமயந்தியால் நிராகரிக்கப்பட்ட கலி, சினங்கொண்டு, நளனையும், தமயந்தியையும் சதியால் பிரித்து தொடர் துன்பங்கள் விளைவிப்பதை விவரிக்கும் காண்டமாகும். இது 147 வெண்பாக்களைக் கொண்டது.

கலிநீங்கு காண்டம் - கலியின் தொல்லைகள் நீங்கி, நளனும் தமயந்தியும் இல்லறம் திரும்புதலை விவரிக்கும் காண்டமாகும். இது 89 வெண்பாக்களைக் கொண்டது.

சகுனியின் சூழ்ச்சியால், நாடு, நகரம், அனைத்தையும் இழந்து காட்டில் இருந்த தருமரின், கவலையைப் போக்கி நம்பிக்கை அளிக்கும் விதமாக, வியாசர் அவருக்கு நளனது கதையைச் சொல்வது போல் நளவெண்பா இயற்றப்பட்டுள்ளது.

நூலாசிரியர் - புகழேந்திப் புலவர்.

தமிழ் இலக்கிய உலகில், கம்பனுக்கு நிகரான, புலமையும், கற்பனைச்செறிவும் கொண்டவர் புகழேந்திப் புலவர். வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர். "வெண்பாவுக்கோர் புகழேந்தி" எனப் போற்றப்பட்டவர். ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவர். சோழன் பாண்டியன் மகளை மணந்தபோது, அறிவு திருத்தும் நல்லாசிரியராக சோழநாட்டுக்கு வந்தவர். குலோத்துங்கச்சோழனது வேண்டுகோளுக்கிணங்க நளவெண்பாவைப் பாடினார்.

இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு வெண்பாவின் பொருளையும், சிறப்பையும் ஆராய்வோம்.

குறிப்பு:

"மதுரைத் திட்ட" த்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நளவெண்பா மின்நூலினை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பதிவு.

No comments: