சாலையோரச் சிறார்கள்...
இவர்கள் வானத்தைத்
தொலைத்த வண்ணப் பறவைகள்.
முகாரியில் முனங்கும்
சின்னக் குயில்கள்.
யாரோ சிலரின்
தவறுகளால் நிரந்திரமாகச்
சிலுவையிலறையப்பட்ட
சின்னயேசுக்கள்.
இந்நாட்டு மன்னர்கள்
இவர்கள், தங்கள் ராஜ்ஜியங்களை
வீதியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
குழலாகும் முன்பே
பற்றி எரிகின்ற
மூங்கில் குருத்துக்கள்
பசியைப் பால்யவிவாகம்
செய்தவர்கள்
இந்த சாலைப் பூக்களைப்
பார்க்கும் நேரம்
என் விழிகளில்
மழைக்காலம்
நேற்றுவரை
இச்சிட்டுகளுக்கு
நாம் என்ன செய்தோம் ?
போகட்டும் நண்பரீர் !
வீரியமிலா விதையும்
மனிதமிலா மனிதனும்
ஒன்றென்று இன்று
அறிந்தோம்.
வாருங்கள்
இந்த சாலைப் பூக்களுக்கு
நிழல் தருவோம்.
இனி நம்
கிழக்கில் மட்டுமல்ல
மேற்கிலும்
விடியல் வரும் !!
No comments:
Post a Comment