Wednesday, January 13, 2010

சென்னையில் ஓர் அறிவுத் திருவிழா !!

"ஒரு நல்ல புத்தகம் திறக்கும் பொழுது நரகத்தின் வாசல் மூடப்படுகிறது."

திருவிழா என்ற பதத்திற்குக் குறைவாக வேறு எந்த வார்த்தையையும் நீங்கள் நிச்சயமாக உபயோகப்படுத்த முடியாது - சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகத் திருவிழாவைக் குறிப்பிடுவதற்கு.

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகிப் போன சென்னை புத்தகத் திருவிழா, தொடர்ந்து 33வது ஆண்டாக சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் கடந்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 வரை இனிதே நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு 585 அரங்குகள், 390 பதிப்பாளர்களுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழா, இந்த வருடம் 11/2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 606 அரங்குகள் , 405 பதிப்பாளர்கள் மற்றும் 10000க்கும் மேற்பட்ட புதிய நூல்களுடன் வாசகர்களைச் சந்தித்தது.

டிசம்பர் 30 அன்று, புத்தகத் திருவிழாவினைத் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, "எனக்குப் புத்தகங்கள் பிடிக்கும். வாசிப்பு பிடிக்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின் பக்கத்தில் உட்காரத்தான் மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு நீங்கள் என்னை அழைக்காதிருந்தாலும் நானாக வந்து முன் வரிசையில் ஒரு பார்வையாளனாக அமர்ந்திருப்பேன். [சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு கலைஞர் வரவில்லை) ஒரு எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கக்கூடிய விருதுகளும் கௌரவங்களும்தான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. என் ஆட்சியை யார் பாராட்டினாலும் எனக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.." என்று வெகுவாக உருக்கம் காட்டினார். அதே சமயம் சென்ற வருடம் சிறந்த ஆங்கில எழுத்தாளர் விருது பெற்ற முத்தையா எழுதிய "Chennai - Revisited" ஆங்கில புத்தகத்தின் காலவரிசைப் பட்டியலில் தனது பெயர் குறிப்பிடப்படாததைச் சொல்லி சூரியனாகச் சுட்டார். (ஆனால் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெயர்கள் அந்த காலவரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது ! ). கலைஞர் பேசி முடித்து கிளம்பிய உடனேயே, வாசகர்கள் "Chennai - Revisited" மற்றும் அதன் தமிழாக்கமான "சென்னை - மறுகண்டுபிடிப்பு" (கிழக்கு பதிப்பகம்) புத்தகங்களை ஆவலோடு தேடிச்சென்று வாங்கியதைப் பார்க்க முடிந்தது. (http://nhm.in/shop/978-81-8493-234-8.html)

வழக்கம் போல, இந்த முறையும் மாலை வேலைகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. உரை அரங்கம், பட்டிமன்றம், கவிதைத் திருவிழா போன்றவற்றில் திரளான வாசகர்கள் கலந்து கொண்டனர். இலக்கிய, திரையுலக ஆளுமைகளான கமல், எஸ்.ராமகிருஷ்ணன், கவிக்கோ.அப்துல் ரகுமான், கவிஞர். மு. மேத்தா, கவிஞர்.பா. விஜய், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சுகி. சிவம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில், தங்கள் கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

3ம் நாள் விழாவில் "சினிமாவும் இலக்கியமும்" என்ற தலைப்பில் பேசிய கமல், இலக்கியவாதிகள் திரைப்படத்துறைக்கு வந்தால் தான் நல்ல திரைப்படங்களைத் தர முடியும் என்றார். அதே நோக்கில் தான் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை திரைப்படத்துறைக்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவரைச் சரியாக பயன்படுத்த முடியாமல் பல நேரங்களில் சமரசம் செய்ய வேண்டியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களான சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பா. ராகவன் ஆகியோர் ஏறக்குறைய தினமும் வெவ்வேறு அரங்குகளில் வாசகர்களை சந்தித்தனர்.

இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் புத்தகங்களில் ஒன்றான "ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்" (கிழக்கு பதிப்பகம்) (http://nhm.in/shop/978-81-8493-311-6.html) புத்தகத்தின் ஆசிரியரும், முன்னாள் சி.பி.ஐ தலைமை புலனாய்வு அதிகாரியுமான கே. ரகோத்தமன் வாசகர்களுடன் கலந்துரையாடுவற்காக கிழக்கு அரங்கிற்கு வந்திருந்தார். எந்தவொரு தொழில்முறை எழுத்தாளரும் பொறாமை கொள்ளும் வகையில் வாசகர் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. கிட்டத்தட்ட
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாசகர்களின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் நின்று கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ("உட்கார்ந்து பேசுங்களேன்" என்று சொன்னதற்கு "நான் போலீஸ்காரன், எனக்கு உட்கார்ந்து பழக்கமில்லை" என்றார்)

காலச்சுவடு பதிப்பகத்தின் பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இரண்டு புத்தகங்களுக்கு ஒரு புத்தகம் என்ற சலுகையை அறிவித்திருந்தார்கள். வேறு ஏதோ பதிப்பகம் 600 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் இலவசமாக சூட்கேஸ் வழங்குவதாக அறிவித்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் ஈழப் பிரச்சனை குறித்த புத்தகங்கள் முக்கால்வாசி அரங்குகளில் நீக்கமற நிறைந்திருந்தன. அதே போல தந்தை பெரியாரின் சுய சரிதையான, ப.சு. கவுதமன் தொகுத்த "ஈ. வெ. ராமசாமி என்கின்ற நான்" புத்தகமும் பரவலான கவனத்தைப் பெற்றது.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் இன்னொரு முக்கியமான பிரபலம் - லிச்சி ஜூஸ். ஒரு முழு டம்ப்ளர் - பத்து ரூபாய். அதன் சுவையும் மணமும், ஆகா! அற்புதம். அதே போல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டாலிலும் மக்கள் வெள்ளம்.

பல்வேறு துறை பிரபலங்களும் புத்தக சந்தையில் தாங்கள் வாங்கிய புத்தகங்களைப் பற்றி இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும் எழுதி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக இணைய உலகின் சூப்பர் ஸ்டார் புத்தக திருவிழா தான்.

புத்தகப் பிரியரான இயக்குனர் மிஷ்கின், இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் தான் வாங்கிய புத்தகங்களாகப் பட்டியலிட்டவை:

சொற்கள் - ழாக்பிரேவர்
குட்டி இளவரசன் - அந்துவாந்த் எக்ஸ்பெரி
Crocodile fever - Zai Whitaker
Spiders - K.Vijayalakshmi
Land of green plums - Herta Muller
Moonwalk - Michael Jackson
What the Dog Saw - Malcolm Gladwell
The Buddha - Osho
Commentaries on Living - Jiddu Krishnamurti

தி.மு.க. வழக்கறிஞர் ஜோதி, சுமார் 60000 மதிப்புள்ள புத்தகங்களை மொத்தமாக வாங்கிச் சென்றிருக்கிறார். (உபயம் : மிஸ்டர் கழுகு - ஜூ.வி)

பபாசியின் புதிய நிர்வாகம் நடத்தும் முதல் புத்தகக் கண்காட்சி என்பதால், விளம்பர உத்திகளிலும், கட்டமைப்பிலும் சற்று முன்னேற்றம் தென்பட்டது. ஆனாலும் சுகாதாரம் போன்ற அடிப்படை விஷயங்களில் இன்னும் அதிக அக்கறைக் காட்டியிருக்கலாம். பரிசுக் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களையே பரிசாக அளித்தது பாராட்டத்தக்கது.

எதிர்பார்த்ததிற்கும் மேலாக 10 லட்சம் வாசகர்கள் கலந்து கொண்ட ஒரு அறிவுத் திருவிழா இனிதே நடந்து முடிந்தது. சென்னை, ஜனவரியின் மற்றொரு கொண்டாட்டமான சங்கமத்திற்குத் தயாராகி விட்டது.

புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் கொண்டாடுவது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளங்கள். புத்தகங்களின் தலைப்பும் வடிவமும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் இலக்கு ஒன்றுதான் - "மானுடம்"

No comments: