Saturday, January 12, 2008

வரலாற்றுப் பிழைகள்

இந்தப் பதிவு திரைப்படங்களைப் பற்றியது.

வழக்கம் போலவே கேள்வியும், பதிலும் ...

பொழுதுபோக்கினைத் தவிர்த்து திரைப்படங்கள் நம் அன்றாட வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையா ?

நிச்சயமாக !!

ப்ரான்ஸ்வா த்ரூபோ எனும் திரைப்பட மேதை, ''வாழ்க்கையை விட திரைப்படம் மேலானது'' என்கிறார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது ''அரிச்சந்திரா'' நாடகமே.

காமராஜர், பக்தவச்சலம் போன்ற ஒரு சிலரைத் தவிர தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்த அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கிறது.

இவை எல்லாற்றுக்கும் மேலாக, இன்னமும் நம் மக்களில் பெரும்பான்மையோர் திரைப்படங்களையும், திரைப்பட கதாபாத்திரங்களையும் தங்கள் வாழ்வின் பிம்பம் என்றே கருதுகின்றனர்.

ஆக திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு வலிமையான சாதனமாக தங்களை நிரூபித்திருக்கின்றன.

இது மாற்றுக் கருத்தில்லாத உண்மை.

முதலில் இதிகாசங்களையும், புராணங்களையும் மட்டுமே கதைக்களங்களாக கொண்டிருந்த திரைப்படங்கள், நாளடைவில் சமுதாய அவலங்களையும், நாட்டு நடப்புகளையும் கருவாகக் கொள்ள ஆரம்பித்த போது, நிஜமாகவே சமூகத்தில் நல்ல அதிர்வுகளை உருவாக்கின.

ஆனால் இன்றைய நவீனகாலத் திரைப்படங்கள் மெல்ல மெல்ல தங்களின் அடையாளங்களை இழந்து வருவதாகத் தோன்றுகிறது.

அளவுக்கு மீறிய ஆபாசமும், வன்முறையும் மட்டுமே பிரதான கதைக்களங்களாக மாறிவிட்ட நிலையில், இன்னும் கூடுதலாக,
சில திரைப்படங்களில் நம் வரலாற்றையும், காவியங்களையும் திரித்து கேலிக்கூத்தாக்கும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.

இந்தப் பதிவின் அடிப்படையே நண்பர் அபிராமி சுட்டிக்காட்டிய ஒரு திரைப்படக்காட்சியும், அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்விகளும்தாம்.

பார்த்திபன் கனவு எனும் திரைப்படத்தில், வருகிற ஒரு நகைச்சுவைக் காட்சி.

நடிகர் விவேக், இயக்குநர் மனோபாலா இருவரும் மகனும் தந்தையுமாக நடித்திருப்பார்கள். படத்தில் மனோபாலா ஒரு ஆசிரியர். மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவனிடம்

'' கண்ணகி மதுரையை எரித்தாள்; மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது. இது என்ன காலம் சொல்லு '' என்று வினவுவார்.

அப்போது குறுக்கிடும் விவேக்,

'' பாண்டியன் கோவலனைக் கொன்னது கண்ணகியோட பெர்சனல் மேட்டர், அதுக்கு ஏன் கண்ணகி மதுரையை எரிக்கணும் ? நீங்க இப்படி சொல்லிக் குடுக்கிறதாலதான் நாளைக்கு இவன் (மாணவனைப் பார்த்து) பெரிசானதும், ஏதாவது பிரச்சனைன்னா உடனே பஸ்ஸை எரிக்கிறான்'' என்பார்.

அதைக்கேட்ட மாணவனும் மனோபாலா தவறாக கற்றுக் கொடுப்பதாக சொல்லி, வகுப்பைவிட்டு வெளியேறுவதாக காட்சி அமைந்திருக்கும்.

இதை மேலோட்டமாகப் பார்த்தால், விவேக் பாணியிலமைந்த வழக்கமான, '' கருத்து '' சொல்வது போன்ற ஒரு நகைச்சுவைக்காட்சி தான்.. ஆனால் இதில் நெருடலான விசயம், கண்ணகி மதுரையை எரித்த நோக்கத்தையும், நிலையையும் திரித்துச் சொல்லியிருப்பது.

நண்பர் எழுப்பிய வினாக்கள் இவைகள்தாம்..

>> தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிற கண்ணகியை, ஒரு சுயநலமிக்க மூன்றாம்தரப் பெண்ணாகச் சித்தரிப்பதா ?

>> நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் வன்முறையைத் தீர்வாக சொல்கிற காவியமா ?

>> கண்ணகி மதுரையை எரித்ததையும், தன் தலைவருக்குத் தரப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று மாணவிகளைக் கொளுத்திய நிகழ்வையும் ஒரே பார்வையில் கொள்வதா ?

இந்த வினாக்கள் முற்றிலும் நியாயமானவை. கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவையும் கூட..

ஏனென்றால் ஒரு காவியத்தையோ, வரலாற்றினையோ முற்றிலும் புரிந்து கொள்ளாமல், விமர்சிப்பதோ, அதனை மக்கள் மேடைக்கு எடுத்து வருவதோ, மிகப்பெரிய தவறு.

அதிலும் திரைப்படங்களைப் போன்ற வலிமையான ஊடகங்களில் வரலாற்று நிகழ்வுகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை.

இந்த நகைச்சுவைக்காட்சியில் சித்தரிக்கப்படுவதைப் போல சொந்த நலத்திற்காகவா கண்ணகி சினம் கொண்டாள் ? இல்லை. மதுரையை எரித்த கண்ணகியின் கோபம் வேறுவகையானது.

பாரதி சொல்வானே,

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா !!
மோதி மிதித்துவிடு பாப்பா !! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !! என்று.

அதைப்போல, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நியாயமான கோபம் கண்ணகியினுடையது.

பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்த கண்ணகிக்கு பாண்டிய மன்னனாலேயே அநீதி இழைக்கப்பட்டது.

" மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி " எனும் மொழிக்கேற்ப தவறான நீதி சொன்ன மன்னன் ஆட்சி செய்யும் நகரமும் அநீதிகளின் உறைவிடமாகவே இருக்கும் என்பதாலேயே கண்ணகி மதுரையை எரிக்கத் துணிந்தாள்.

இன்னும் சொல்லப் போனால், மதுரையை எரித்திடுமாறு அக்னிக்கு ஆணையிடும்போதே யாரையெல்லாம் தவிர்த்திட வேண்டுமென்ற பட்டியலையும் சேர்த்தே தருகிறாள்.

சிலப்பதிகாரத்தில், மதுரைக்காண்டத்தில் வஞ்சின மாலையில் வருகிற அந்தப் பாடல் இதோ !! :

பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

பொருள் : அந்தணர், அறவழி தவறாதவர்கள், பசுக்கள், பத்தினிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டுத் தீயவர்களை மட்டும் எரித்திடுக எனக் கோபம் கொண்டு கண்ணகி ஏவ, கூடல் நகராகிய மதுரையைப் புகை மண்டிற்று.

நம்முடைய எல்லா இலக்கியங்களும் நல்ல விசயங்களைத்தான் தாங்கியிருக்கின்றன. நாம் தான் அவற்றைச் சரியாக புரிந்து கொள்வதோ, பயன்படுத்துவதோ இல்லை.

இந்த காட்சி ஒரு சோற்றுப் பதம் மட்டுமே ! இதைப் போல இன்னும் எத்தனையோ ஊடகங்களில் வரலாற்றுப் பிழைகள் மிச்சமிருக்கின்றன !!

போனது போகட்டும் !!

இனிமேலாவது

>> படைப்பாளிகள் தங்களுக்குரிய சமூகப் பொறுப்பையுணர்ந்து, சரியான கருத்துக்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.

>> நகைச்சுவையோ, பாடல் காட்சியோ அல்லது வேறு வசனங்களோ இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பதாயின், தணிக்கைக்குழு, அவற்றின் ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

>> இது அவசியமானது - நாம் எந்த ஊடகத்திலேயாவது, ஏதாவது ஒருவகையில், நமது வரலாறோ, கலாச்சாரமோ, இலக்கியமோ, தவறாகச் சொல்லப்பட்டால் உடனடியாக குரலெழுப்ப வேண்டும்..

நினைவிருக்கட்டும் !! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வைத்திருப்பதை, நமது தலைமுறையிலா தொலைப்பது ????

9 comments:

Abi said...

முழுமை யான பதிவு. என்ன பிழை ,அதன் முக்கியத்துவம் என்ன, அதனால் உண்டாகும் பாதிப்பு, அதற்கு விடை என்ன என்று அழகாக தெளிவாக சான்றுகளொடும் விளக்கங்களொடும் சிரத்தையோடு கொடுத்து உள்ளிர்கள். மிக்க நன்றி. பாராட்டுகள்.

Unknown said...

மிகவும் அருமை,சரியாக சூட்டி கட்டி உள்ளீர்கள்...

சிறகுகள் said...

அபிராமி & வாணி,

தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !!

தர்மா

Archana said...
This comment has been removed by the author.
Archana said...

Hey i dont know how to type in Tamil. So i am typing in English... I dont agree with you Dharma..You are saying Kannahi is not selfish because she burnt Madhurai because she wanted to punish injustice. If she is not selfish why did not she do the same way to her husband when he left her. Because he is her husband and you may argue that it is our culture. That is the point about Vivek's comedy. Take in real life what percentage of women are affected by the situation in which Kannahi was in. If she had done a good justice to his betraying husband that would have been a good example. But she shows her anger towards injustice to people who are not related to her. She burns Madhurai. She has some exceptions for whom to burn. But can you assure that the fire did not affect those people...I cannot accept it. I can NEVER accept kannahi is not Selfish...

D said...

நண்பரே...நல்ல கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்....அதாவது நம்முடைய இலக்கியங்களை தவறாக சித்திகரிக்கக் கூடாதென்று நீங்கள் சொல்வது ஒரு பக்கமிருக்கட்டும்...ஆனால் அர்ச்சனா அவர்கள் சொன்ன பதில் ஒரு நல்ல விவாத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது...நான் சொல்ல விரும்புவது...இந்த மாதிரி விசயங்களை ஒரே கோணத்தில் அலசாதீர்கள்....கண்ணகி எரித்திருக்க வேண்டியது கோவலனை....ஏனென்றால்...
அவளுடைய அனைத்து சங்கடங்களுக்கும் காரணம் அவந்தான்..ஆனால ஏன் அதை செய்ய வில்லை....நீதி தவறிய மன்னனை குற்றஞ் சுமத்திய நம் கற்புக்கரசி நெறி தவறிய தன் கணவனை நினைத்து அழுகிறாள்...ஆக இது தான் பெண்களின் நிலையென்று அப்போதே கூறி விட்டாள்...இதை விமர்சனம் செய்ததற்காக விவேக்கை நீங்கள் திட்டுங்கள்..இந்த மாதிரி பெண் நிலையை சொன்னதற்காக...அதிகார ஆசிரியரை என்ன செய்யப் போறோம்...ஆகவே...இந்த மாதிரி தவறுகள்(படத்தில் வந்த நக்கல் காட்சி) வந்தால் தான் இந்த மாதிரி நல்ல விவாதங்களும் எழும்....நன்றி நண்பரே...விவாதம் தொடரட்டும்....

Abi said...
This comment has been removed by the author.
சிறகுகள் said...

அர்ச்சனா & தயாளன்,

உங்களது விமர்சனங்களுக்கு மி்க்க நன்றி !!

என்னுடைய விளக்கங்களை விரைவில் தனிப் பதிவிடுகிறேன்.

நல்ல விவாதங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் வையுங்கள் !!

தர்மா

Abi said...

வைரமுத்துவின் முதல் கவிதைத்தொகுப்பான ''வைகறை மேகங்கள்'' எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில வரிகள் உங்களது கருத்துக்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளன.

இதோ அவை :

கண்ணகியே! தாயே! கறுப்பான இரும்பிடையே
பொன்னகையே! பூவே! புரட்சித்துறவியவன்
தீட்டிவைத்த காவியமே! திருமகளே! தேனுக்குள்
போட்டுவைத்த பழம்போலப் பழந்தமிழர்க் கினிப்பவளே !

மாதத்தின் முழுநிலவே! மறமகளே! உன்னினிய
பாதத்தில் சின்னமகன் பாட்டுமலர் தெளிக்கின்றேன்.

உச்சிமிகக் குளிர்ந்துவிட உன்னைப் புகழ்ந்துவிட்டேன்.
நிச்சயமாய் இனிஎன் நினைப்பைச் சொல்லுகிறேன்.

அந்திப்பூ விரிவதுபோல் அறிவை விரித்துவைத்துச்
சிந்தித்தேன். ஆமாம்! சிரிப்புத்தான் வந்ததம்மா!

உள்ளபடி உன்வாழ்க்கை உலகுக் குதவாது.
செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்.

உண்ணுகின்ற சோற்றில் உமியொட்டி இருத்தல்போல்
பொன்மகளே உன்வாழ்வும் புழுதி படிந்ததென்பேன்.

பருவநிலாக் காலத்தில் பயிரைப்போய்க் காவாமல்
அறுவடைக்குச் சென்றால் ஓ! ஆழாக்கும் கிட்டாதே !!

தொட்டு மாலையிட்டோர் தோகையரைக் கூடியபின்
விட்டுப் பிரிந்து வேறுதிசை போனாலும்
கண்ணீரைத் தினம்சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்
பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே
இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும் !!
சந்தையிலும் விலைபோகாச் சரக்காகிப் போகட்டும் !!

கல்லாகிப் போனவளே! கண்ணகியே ! நீபெற்ற
பொல்லாத மகனொருவன் புலம்புவதைக் கேளிங்கே !!

கட்டில் சுகங்காணக் காளையவன் செலும்போதே
தட்டிக் கேட்டிருந்தால் தவறி யிருப்பானா ?

பெட்டிப் பாம்பாகப் பேசா திருந்ததுதான்
கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்.
உப்புக் கடல்நோக்கி ஓராறு செல்லுவதும்
இப்புவியில் வியப்பில்லை எழில்மகளே! உன்கணவன்
தப்பான கடல்நோக்கித் தாவிச் செலும்போதே
அப்பப்பா! ஈதென்ன அநியாயம் எனச்சொல்லி
அணையொன்றைக் கட்டியந்த ஆண்மகனைத் தடுத்திருந்தால்
தினைவனத்துக் கிளிபோலத் திருமகளே வாழ்ந்திருப்பாய்.

அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்.
அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்.

அளவுக்கு மேல்பொறுமை அன்னமேநீ காட்டியதால்
களவுக்குப் போனதம்மா காத்துவைத்த உன்சொத்து.

உத்தமிநீ என்றேநான் ஒப்புக்கொள்வேன் ஆனால்
நித்திலத்தேன் பெட்டகத்தை நீயுன்றன் கைக்குள்ளே
வைத்திருக்கத் தெரியாமல் வாழ்விழந்து போனாயே !!
பைத்தியந்தான் உன்னைப் பார்புகழ பாடியவன்

படையிழந்த பின்னாலே பார்கவர நினைத்தாயே !!
உடைந்தவோர் ஆடியினை ஒட்டவைக்க முயன்றாயே !!

அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடி
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே !!

அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டிநின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய் !!

இப்படி...

இந்தக் கவிதைப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய டாக்டர். ரா. சீனிவாசன் அவர்கள்,

"கண்ணகியின் அழிவுக்கு, அவளது கற்பு எந்த அளவும் துணை செய்யவில்லை. அவன் விலைமாதின்பின் செல்லவில்லை.
கலைமகளை வழிபட்டான். காதல் மலராக மணிமேகலை பிறந்தாள். ஏன் மாதவியின் மலர்ந்த வாழ்வுக்குக் கண்ணகி குறுக்கே
நிற்க வேண்டும்? அவள் கணவனுக்குத் தந்த உரிமை அவள் பெருமை காட்டுகிறது. ஊழ்வினையும் அரசியல் நீதியும் அவளது
அவல வாழ்வுக்குக் காரணமாகும். இருப்பினும் இந்தக் கவிதை வைரமுத்துவின் புதிய பார்வையினைப் புலப்படுத்துகிறது. " என்று கூறுகிறார்.

பார்வைகள் வித்தியாசப்படுகின்றன !!

அக்காலத்தின் கண்ணோட்டத்திற்கு ஏற்பக் கதைகளும், காவியங்களும் இயற்றப்பட்டுள்ளன.
ஆண் என்பவன் எத்தனை மனைவிகள் கொண்டாலும் தவறு என்று கருதப்படாத காலகட்டத்தில் எழுதப்பட்டவை இவை.
அதனால்தான் கோவலன் செய்தது பெரிய தவறாக எடுத்துச் சொல்லப்படவில்லை என்று கொள்ளலாம்.

ஆனால் காலங்கள் மாறுகின்றன. கருத்துக்களும் மாறுகின்றன.

இந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்து வெறும் ஆத்திரத்தால் மட்டும் கண்ணகி மதுரையை எரிக்கவில்லை என்பதும், அந்த சொற்களைச் சொல்லும்போது கூட அவள் பிறர் நலனைக் கருத்தில் கொண்டாள் என்பதும்தான்.

அபிராமி.