Thursday, February 4, 2010

கர்ண மோட்சம் - கலையும் வலியும்.

"அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன் ! பாரெங்கும் கீர்த்தி படைத்தேன். தனக் கர்ணன் என்று பெயரேடுத்தேன் ! நான் தனக் கர்ணன் என்று பெயரேடுத்தேன் ! " என்ற கூத்து வரிகளோடு தொடங்கி, ஒரு அழகான சிறுகதையின் நேர்த்தியோடு, சிறிதும் பகட்டில்லாத காட்சிகளாகவும் உரையாடல்களாகவும் விரிந்து, இறுதியில் காலம் காலமாய் கட்டிக் காப்பாற்றி வந்த கலைகளையும், கலைஞர்களையும் நாகரீக வளர்ச்சி என்ற பெயரால் காவு கொடுத்துவிட்டு நிற்கிற நம் தலைமுறைத் தவறை முகத்திலறைந்தாற் போல் சுட்டிக்காட்டி விட்டு பதினைந்தே நிமிடங்களில் முடிந்து போகிறது - "கர்ண மோட்சம்".

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியின் மாணவர் முரளி மனோகர் இயக்கிய 'கர்ண மோட்சம்' தேசிய அளவில் 2008ம் ஆண்டிற்கான சிறந்த கலை மற்றும் பண்பாட்டுக் குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருக்கும் கூத்துக் கலையின் இன்றைய நிலையையும், கூத்துக் கலைஞர்களின் வறுமை பீடித்த வாழ்க்கையையும் எவ்வித மிகையும் இல்லாமல் மிக நுட்பமான காட்சியமைப்புகளாய் இக்குறும்படம் பதிவு செய்திருக்கிறது. உயிரோட்டமான கதைக் கருவும், நிதர்சனமான வசனங்களும், ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையும் ஒரு குறும்படத்திற்குரிய எல்லைகளைத் தாண்டி கனமான
அதிர்வுகளையும் ஒருவித குற்ற உணர்ச்சியையும் நமக்குள் உருவாக்குகின்றன.

கதை இதுதான். கர்ண மோட்சம் கூத்தில் கர்ணன் வேஷம் கட்டும் கோவிந்தன், ஒரு பள்ளியில் கூத்து நடத்துவதற்காக கிராமத்திலிருந்து தனது பத்து வயது மகனுடன் சென்னைக்கு வருகிறார். எதிர்பாராத விதமாக பள்ளி நிர்வாகி ஒருவர் இறந்து போனதால் அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. 'கூத்து கட்டினால் பணம் கிடைக்கும். தன் மகன் ஆசைப்பட்ட கிரிக்கெட் மட்டையை வாங்கித் தரலாம்' என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்த கோவிந்தனின் கனவு தகர்ந்து போகிறது. ஊருக்குப் போகக்கூட பணமின்றி, பள்ளித் தலைமையாசிரியரின் உதவிக்காக, ஒரு டீக்கடையின் வாசலில் பசியோடு தன் மகனுடன் காத்திருக்கிறார். அதே கடையில், முதலாளியின் திட்டுகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் வாய் பேச முடியாத சிறுமி ஜானகி, தன் முதலாளிக்குத் தெரியாமல் கர்ண வேஷத்தில் இருக்கும் கோவிந்தனுக்கு இட்லி கொண்டு வந்து கொடுக்கிறாள். இதனால் நெகிழ்ந்து போன கோவிந்தன் ஜானகிக்கு கூத்துக் கலையின் குரு வணக்கத்தையும்,
முதல் அடவுப் பாடத்தையும் கற்றுத் தர ஆரம்பிக்கிறார். ஆனால் பாதியிலேயே கடை முதலாளி ஜானகியை அடித்து இழுத்துச் செல்ல, மனம் வெறுத்துப் போய் தன் கிரீடத்தையும் ஆபரணங்களையும் சாலையில் எதிர்ப்படும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட்டு தன் ஊரை நோக்கி நடப்பதாக கதை முடிகிறது.

படம் நெடுக ஏராளமான திரைக்கதை உத்திகளைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலேயே கோவிந்தனின் மகன் சாலையில் கிடக்கும் காலி பெப்ஸி பாட்டிலை எடுத்து குடிக்க முயல்வதும், டீக்கடையில் ஒரே ஒரு வடையை வாங்கித் தன் மகனிடம் கொடுத்துவிட்டு, கோவிந்தன் வெறும் தண்ணீரோடு திருப்திப்பட்டுக் கொள்வதும் கூத்துக் கலைஞர்களின் வறுமையைச் சொல்லாமல் சொல்கிறது. கர்ணன் வேஷம் கட்டிக்கொண்டு, சிறுமியிடம் யாசகமாக இட்லி வாங்கிச் சாப்பிடுவது, நிஜக் கர்ணர்கள் எதையும் கொடுக்கிற நிலையில் இல்லை என்பதை உணர்த்துகிறது. கூத்தின் முக்கிய அம்சமே கூத்துக் கலைஞர்கள் பாடும் பாடல்கள்தாம் என்றாலும், தன் கலையைக் கற்றுக் கொள்ள முன்வந்த ஒரே காரணத்திற்காக வாய் பேச முடியாத பெண்ணுக்குக் கூட கூத்துக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தர கோவிந்தன் முயல்வது, தான் கற்ற கலையை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற கூத்துக் கலைஞர்களின் ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ஜானகிக்கு கூத்து கற்றுத் தரும் அதே வேளையில், கோவிந்தனின் மகன் ரோட்டில் கிடந்த பொம்மை செல்போனில் டெண்டுல்கரிடம் நலம் விசாரிப்பதும், பெப்ஸி உமாவிடம் விஜய் படப் பாடல் போடச் சொல்லி விளையாடுவதும், இன்றைய சூழலில் கூத்துக் கலைஞர்களின் வாரிசுகளுக்கு அக்கலையைக் கற்றுக் கொள்வதற்கு சிறிதும் ஆர்வமில்லை என்பதை தெளிவாக்குகிறது. இறுதிக்காட்சியில் கோவிந்தன் தனது கிரீடத்தையும், ஆபரணங்களையும் ரோட்டில் எதிர்படும் சிறுவர்களிடம் கொடுத்து விட்டு நடக்கும் காட்சி, கோவிந்தனும் இனி கூத்து கட்டுவதை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடுவாரோ என்ற பதபதப்பை உருவாக்குகிறது.

திரைக்கதைக்கு அடுத்து படத்தின் முக்கியமான அம்சம் எஸ். ராமகிருஷ்ணனின் வசனம். எந்தவித மேதவித்தனமும் இல்லாமல், கூத்துக் கலைஞர்களின் வேதனைகளை அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே உரையாடல்களாக வடித்திருப்பது பாராட்டுக்குரியது. "எத்தனையோ பேரு உசுரைக் குடுத்து வளர்த்த கலையை, இன்னிக்கி டிவிப்பொட்டி முழுங்கிடுச்சு" என்பது போன்ற வசனங்கள் சாட்டையடியாய் உறைக்கின்றன.

தற்போதைய தேசிய விருதிற்கு முன்பாகவே கர்ணமோட்சம் தமிழக அரசின் 2005 -2006 ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பிரிவில் சிறந்த இயக்கம் , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பதனிடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப்
பெற்றுள்ளது. அதே ஆண்டில் கேரளாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளது. அத்துடன் திருப்பூரில் நடைபெற்ற குறும்பட போட்டியில் முதல் பரிசும், சென்னையில் உள்ள அஸ்விதா என்ற அமைப்பு நடத்திய நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த இயக்கத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. மேலும் தினமணியும் நெய்வேலி புத்தகசந்தையும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில் பதினைந்தாயிரம் ருபாய் பணத்துடன் கூடிய முதல் பரிசை வென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற International Students Film Festival,.First Frame 2008 என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. ஜெர்மன், இஸ்ரேல் ,போலந்து, பிரான்ஸ், செர்பியா. துருக்கி, தைவான், சிங்கப்பூர் , ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்ளிட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து மொத்தம் 91 படங்கள் திரையிடப்பட்டன. பர்ஸ்ட் பிரேம் திரைப்பட விழாவில் தமிழ் படம் ஒன்று இந்தியாவின் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இக்குறும்படத்தை இயக்கிய திரைப்படக் கல்லூரி மாணவரான முரளி மனோகர் தற்போது இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கர்ண மோட்சம் மட்டுமின்றி ஜெமினி திரைப்பட நிறுவனத்தில் மெஸ் நடத்திய மணியம் பற்றி "அக்காலம்" என்ற பெயரில் ஒரு ஆவணப்படமும் இயக்கியிருக்கிறார். இக்குறும்படத்தின் இசையமைப்பாளரான இரா.பிரபாகர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். முக்கிய வேஷத்தில் கூத்துக் கலைஞராக நடித்தவர் கூத்துபட்டறையில் பயின்ற ஜார்ஜ்.

"அசல் மகா பாரதத்தைப் பாமர மக்களுக்கும் புரியுற மாதிரி எளிமையா தெருக் கூத்துகளில்தான் சொல்வாங்க. முன்னெல்லாம் அதுக்குத் தெரு நிறையக் கூட்டம் வரும். ஆனா, சேட்டிலைட் சேனல்கள் முன்னாடி போட்டி போட முடியாம அவங்க முடங்க வேண்டிய கட்டாயம். தப்பிப் பிழைக்க வழி தெரியாம ராமனா நடிக்கிறவர், 'என் பேரு படையப்பா'னு குத்து டான்ஸ் போட ஆரம்பிச்சார். அபார திறமை தேவைப்படும் ஒரு நுணுக்கமான கலை, அழிவின் விளிம்பில் இருப்பதைப் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அதுதான் 'கர்ண மோட்சம்' படத்தின் மையக் கரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்தான் படத்துக்குக் கதை, வசனம். தேசிய விருது போக, கனடாவில் உலகத் தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகள், இந்திய அளவில் மூன்று விருதுகள், மாநில விருதுகள்னு இதுவரை 25 விருதுகளுக்கு மேலே குவிச்சிருக்கார் எங்க கர்ணன். படிக்கப் பணம் இல்லாம நான் கஷ்டப்பட்டபோது எல்லாம் நான் கேட்காமலேயே நூறு, இருநூறுன்னு பணத்தை என் கையில் திணிச்ச என் செட்டி மண்டபம் கிராம மக்களுக்கு இந்தப் படத்தைக் காணிக்கையாக்குறேன்!'' என்று நெகிழ்கிறார் முரளி மனோகர்.

"கர்ண மோட்சம்" குறும்படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

No comments: