Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகா கைது - அறுவடையாகும் வினைகள்

சோகமும், துரோகமும், பழி வாங்கல்களும் நிறைந்த இலங்கை வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் அதே குணாதிசயங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இம்முறை யுத்தம் இரு சிங்கள இனவாதிகளுக்குள்ளாகவே. தமிழின அழித்தொழிப்பிற்காக யுத்த களத்தில் தோளோடு தோளாக ஓரணியில் நின்ற இருவர் கூட்டணி, அரசியல் களத்தில் இரு வேறு அணிகளாக எதிரெதிரே, பதவிக்காக மோதிக் கொண்ட போதே அடுத்த கட்ட களேபரங்களுக்கு இலங்கை தயாராகிவிட்டது. நடந்து முடிந்த இலங்கை ஜனநாயகத் தேர்தலில் 11 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷே வெற்றி பெற்ற உடனேயே எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு சற்று தாமதமாக நேற்று நடந்திருக்கிறது - எதிரணி வேட்பாளரும், முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதியுமான ஜெனரல்.சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை.

நேற்று (திங்கட்கிழமை), இரவு 9.30 மணி அளவில் ராஐகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சரத் பொன்சேகாவும் அவரது ஊடகப் பேச்சாளரான சேனக சில்வாவும் இலங்கை இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்சேகாவும் அவரது பாதுகாவலர்களும் சேர்ந்து ஜனாதிபதி மகிந்தவையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும், இலங்கையில் இராணுவப் புரட்சிக்கு முயன்றதாகவும் பொன்சேகா மீது
கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் பொன்சேகாவை மிகக் கேவலமான முறையில் நடத்தியதாக, அவருடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு பொன்சேகா நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு (இது பற்றி இன்னமும் பல மர்மங்கள் விலகாத நிலையில் புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் பிரபாகரன் உயிரோடு நலமுடன் இருப்பதாக அறிவித்திருக்கிறது.), புலிகளுக்கு எதிரான முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சாதனையைப் (??) பங்கு போட்டுக் கொள்வதிலும், புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் ஆயதங்களைக் கையாளுவதிலும் ஏற்பட்ட விரிசல் பின்னர் பூதாகரமாகி மகிந்தவையும் பொன்சேகாவையும் எதிரெதிர் அணிகளில் நிறுத்தியது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, தான் தனிமைப்படுத்துவதாக உணர்ந்த பொன்சேகா உடனடியாக இராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிரடியாக
அரசியலில் நுழைந்தார். அதற்கு முந்திய நாள் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சிங்களப் பேரினவாதத்தின் பிரதிநிதியாய் தன்னை வரித்துக் கொண்டு, கற்பனையும் செய்யவியலாத இராணுவ அடக்குமுறைகளை, தமிழினத்தின் மீது பிரயோகித்துவிட்டு மக்கள் மன்றத்திற்கு வந்ததும் வெள்ளை பைஜாமா குர்தாவில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழர் உரிமைக்காக பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார் பொன்சேகா.

கடந்த ஐந்தாண்டுகளாக மகிந்த, அவரது சகோதர்களான பசில் மற்றும் கோத்தபாய அடங்கிய மூவர் அணியின் அராஜகத்தையும், சர்வாதிகாரப் போக்கினையும் சகித்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இலங்கை எதிர்க்கட்சிகளுக்கு பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தேவ தூதரின் வரவாகவே தோன்றியது. எந்தவித அதிகபட்ச நிபந்தனைகளும் இல்லாமல், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகயான ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, தீவிர சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவை பொன்சேகாவை ஆதரித்தன. கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட யுத்தமானது இலங்கையின் பொருளாதாரத்தை மிக மோசமாக (பணவீக்க விகிதம் 28 % என்ற அளவிற்கு) சேதப்படுத்தியிருந்தது. விலைவாசி உயர்வு, தனிநபர் வருமானம் குறைவு, போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு முழுமையான பலன்கள் வழங்கப்படததால் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் மீதிருந்த அதிருப்தி இப்படி ஒவ்வொரு காரணமும் பொன்சேகாவுக்கு சாதகமாகவே அறியப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, போரின் வெற்றியை முன்னிறுத்தி மொத்த சிங்கள வாக்குகளையும் அள்ளி விடலாம் என்ற கனவு, பொன்சேகாவின் திடீர் அரசியல் பிரவேசத்தால் முற்றிலும் கலைந்து போன தோற்றத்தால் தன் வெற்றி குறித்தே கலங்கிப் போயிருந்தார் மகிந்த. தேர்தல் பிரசாரத்தில் கூட ஆவேசமான மகிந்தவைப் பார்க்க முடியவில்லை. இது மட்டுமின்றி "தீவிர மன அழுத்தத்தினால் அலரி மாளிகையிலேயே அடைந்து கிடைக்கிறார்", "அழுத கண்கள், வீங்கிய முகத்தோடு புத்த ஆலயத்தில் என் தம்பிகள் எனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டார்கள் என பிட்சுகளிடம் கதறினார்.", "மொத்த குடும்பத்தினருடன் விமானமேறி வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடப் போகிறார்" என மகிந்தவைப் பற்றி விதவிதமான வதந்திகள் இலங்கை முழுவதும் றெக்கை கட்டின. பொன்சேகா வேறு போர்க் காலங்களில் நடந்த அத்துமீறல்களை மக்கள் மன்றத்திலும், போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்திலும் முன் வைப்பேன் என மகிந்த கம்பெனிக்கு பீதி ஏற்றினார்.

இலங்கை பத்திரிக்கைகளும், தேர்தல் கருத்துக் கணிப்புகளில் பொன்சேகாவையே, முன்னிறுத்தின. எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தலுக்கு முந்தைய நாள் இலங்கை முன்னாள் அதிபரான சந்திரிகாவும் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்க, அப்பொழுதே பொன்சேகா வெற்றி பெற்று விட்டதைப் போன்றதொரு மாயை இலங்கையை ஆக்கிரமித்தது. ஆனால் மறுநாள் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறாக இருந்தன. சிங்களர்கள் மிகத் தெளிவான முடிவினை வழங்கியிருந்தார்கள். தமிழின அழிப்பை முன்னெடுத்துச் சென்ற மகிந்தவையே, சிங்களப் பேரினவாதத்தின் தனிப் பெரும் தலைவராக பெரும்பான்மை சிங்களர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சென்ற முறை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மகிந்த, இந்தமுறை 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பொன்சேகாவை தோற்கடித்து இருந்தார். தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெருவாரியாக பெற்றிருந்த பொன்சேகாவின் தோல்வி நிச்சயம் எதிர்பாராதது என்றே இலங்கை அரசியல்
பார்வையாளர்கள் வியக்கின்றனர். தேர்தல் நாளன்று திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் ஏழுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் தமிழர்கள் அதிக அளவில் ஒட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. இதுவும் பொன்சேகாவின் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது.

தேர்தலில் தோல்வியற்ற அரசியல்வாதிகளின் வழமையான வாக்கியமான "மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். தேர்தலில் அராஜகம் வெற்றி பெற்று விட்டது" என்று சொல்லிவிட்டு பாதுகாவலர்களோடு ஹோட்டலில் போய் பதுங்கிக் கொண்டார் பொன்சேகா. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளன்றே கைது செய்யப்படலாம் என்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவிய வதந்தியை உறுதிப்படுத்தும் விதமாக பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்ட இராணுவம் அவரது முப்பத்திரண்டு பாதுகாவலர்களையும் அவசரச் சட்டத்தின் கீழ் அள்ளிச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்சேகா தான் போர்க் குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது உறுதி என்றும் முடிந்தால் மகிந்த தன்னைக் கைது செய்து பார்க்கட்டும் என சவால் விடுத்தார். பொன்சேகாவின் சவால் கிரேம்ப்ளின் பல்கலைகழகத்தின் டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்காக ரஷ்யா சென்றிருந்த மகிந்தவிடம் தெரிவிக்கப்பட பொன்சேகாவின் கைது இனிதே நடந்தேறியிருக்கிறது.

பொன்சேகா கைதைத் தொடர்ந்து அவருடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அந்த கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் உடனடியாக கைதுசெய்யவும், பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச் சிப்பாய் நிலைக்கு கொண்டுவந்து குடியுரிமையை ரத்து செய்யவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய தீர்மானித்திருப்பதாகவும் இலங்கை அரசுத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவைச் சந்தித்து ரணிலை மீட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்நிலையில் பொன்சோ ராணுவ தலைமை தளபதி பதவி வகித்தவர் என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ராணுவ நீதிமன்றத்தில் விரைவாகவும், ரகசியமாகவும் விசாரித்து அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழக்க ராஜபச்சே உத்தரவிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கற்பனைக்கும் எட்டாத எத்தனையோ விஷயங்கள் நடைபெற்றுவிட்ட இலங்கை அரசியலில் இதுவும் நடக்கலாம்.

போர் மிகத்தீவிரமாக இருந்த காலங்களில், தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்களை சர்வதேச நாடுகள் கண்டித்த போது இராணுவத்திற்குத் தலைமை ஏற்றிருந்த பொன்சேகா சொன்ன பதிலின் சாராம்சம் இது. "இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இராணுவம் தன் கடைமையைச் செய்கிறது." இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொன்சேகாவின் மனைவி அனோகா கைது விஷயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காலச்சுழற்சி என்பது இதுதான் போலும். பொன்சேகாவிற்கு இது அவர் விதைத்த வினைகளின் அறுவடைக் காலம்.

மகிந்த வெற்றி, பொன்சேகா கைது, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என இலங்கை அரசியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்க, இது பற்றி எவ்வித பிரக்ஞையும் இன்றி என்றாவது ஒரு நாள் தன் சொந்த மண்ணுக்குத் திருப்பிப் போவோம் என்ற நம்பிக்கையில் முள்வேலி முகாம்களில் சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் வரிசையில் காத்திருக்கிறான் தமிழன். இப்போதைய சூழலில் அவனைப்பற்றி கவலைப்பட இலங்கை அரசியல்வாதிகளுக்கு நேரமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை.

Monday, February 8, 2010

ஜெயராம் - மாட்டிக் கொண்ட மலையாளி

சினிமா நடிகர்களுக்கு இது போதாத காலம் போலும். சென்ற வாரம்தான் இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகப் பேசி சிவசேனாவின் எதிர்ப்பையும் மிரட்டல்களையும் சம்பாதித்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கும் மேலாக மும்பை அரசியல் மற்றும் திரைக்களங்களை சுறாவளி போல் சுழற்றி அடித்துக் கொண்டிருந்த அப்பிரச்சினை, தற்போது தான் சற்று ஓய்ந்தாற் போலிருந்தது. ஆனால் அதற்குள் மற்றுமொரு புயல் தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. இந்தமுறை எக்குத்தப்பாகப் பேசி மாட்டிக் கொண்டிருப்பது பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் - ஜெயராம்.

ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் மலையாள திரைப்படம் - ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் (Happy Husbands). இத்திரைப்படத்தில் தன் வீட்டு வேலைக்காரியை "சைட்" அடிக்கும் கணவன் கதாப்பாத்திரத்தில் ஜெயராம்
நடித்திருக்கிறார். பட வெளியீட்டையொட்டி மலையாளத் தொலைக்காட்சியான ஏசியாநெட்டிற்கு அளித்த நேர்காணலில், "நிஜ வாழ்க்கையில் நீங்கள் வீ்ட்டு வேலை பார்க்கும் பெண்ணை சைட் அடித்துள்ளீர்களா?" என்ற கேள்விக்கு, "என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்" என்று கூறியிருந்தார். ஜெயராமின் இந்த வெளிப்படையான பதில்தான் அவரைச் சிக்கலில் மாட்டி வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் போதெல்லாம் தன்னை "கும்பகோணத்துத் தமிழன்" எனக் குறிப்பிடும் ஜெயராமின் இந்த நேர்காணல் பற்றிய விஷயம் பத்திரிக்கைகளில் பரபரப்பாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, சென்னையில் உள்ள அவரது வீடும் காரும் தாக்கப்பட்டது. தமிழ் திரையுலகத்திலிருந்தும் ஜெயராமின் கருத்துக்குக் கண்டனக் குரல்கள் கேட்கத் தொடங்கின. தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஷா நிவாஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சர்வதேச மாநாட்டிலும் ஜெயராமின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயராம் "தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது நான் செய்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எதார்த்தமாக சொன்ன ஒரு ஜோக். கண்டிப்பாக அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது அல்ல. இது மனசாட்சி மீது ஆணை. இருந்தும் இது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை முக்கியமாக தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன்." எனத் தெரிவித்தார். முதல்வர் கலைஞரும் பிரச்சினையை இத்தோடு விட்டு விடுமாறு அறிக்கை மூலம் அறிவுறுத்த சற்று அமைதி திரும்பியிருக்கிறது.

இந்த குறிப்பிட்ட நேர்காணலில், ஜெயராம் குறிப்பிட்டதை கொஞ்சம் அதீத நகைச்சுவை உணர்வுடன் சொன்னதாகவே எடுத்துக் கொண்டாலும், தற்போது கிளம்பியிருக்கும் இப்பிரச்சனை மலையாளத் திரைப்படங்களில் தமிழின சித்தரிப்புகளைப் பற்றிய ஆய்வுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

கேரளத் திரையுலகில் தமிழின் ஆதிக்கம் அதிகம். மலையாளப் படங்களை விட நேரடித் தமிழ்ப் படங்கள் வியாபாரத்திலும் வசூலிலும் முன்னணி வகிக்கின்றன. பழசிராஜா திரைப்படத்திற்காக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த நடிகர் மம்மூட்டி இதனை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். கேரளக் கல்லூரி, திரையுலக விழாக்களிலும் கூட அதிகமாக இடம் பெறுபவை தமிழ்த் திரைப்படப் பாடல்களே.இது ஒருவகையில் கேரளத் திரையுலகிற்கு ஒரு அசௌகரியமான விஷயமானதகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட கேரளாவில் தமிழ்த் திரைப்படங்களை நேரடியாக வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை, முன்னணி நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் மலையாள திரை அமைப்பான "அம்மா" வினால் வலுவாக எழுப்பப்பட்டு அடங்கியது. இத்தகைய தொழில்ரீதியான காரணங்கள் மட்டுமின்றி அடிப்படையிலேயே தமிழர்கள் சுத்தமில்லாதவர்கள், மந்தபுத்தி உடையவர்கள் என்ற ரீதியிலேயே மலையாள அறிவிஜீவிகளின் மனப்பதிவு உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த மனோபாவம் இந்தியாவே கொண்டாடும் பல அறிவுஜீவி மலையாள இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். முக்கியமாக மோகன்லால் திரைப்படங்களில்.

இரண்டு முறை தேசிய விருது பெற்ற மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் பல படங்களில் தமிழர்களைச் சித்தரிக்கும் விதம் சற்று கடுமையாகவே இருக்கும். உதாரணமாக பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஸ்ரீனிவாசன், பார்வதி நடித்த படம் 'அக்கரை அக்கரை அக்கரை'. அமெரிக்காவில் நடைபெறும் கதையிது. அங்குள்ள பிரமாண்ட கட்டிடங்களை பார்க்கும் மோகன்லால் ஸ்ரீனிவாசனிடம், "எல்.ஐ.சி. பில்டிங்கின் முன்னால் நின்று வாய் பிளந்து பார்க்கும் தமிழர்கள் இதை பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்துடுவாங்களே" என்பார். தமிழர்களை மட்டம் தட்டும் இந்த வசனங்களை மிக உற்சாகமாக பேசியிருப்பார் மோகன்லால். 'நரன்' திரைப்படத்தில் தமிழில் பெயர் பலகை வைப்பதையும், தமிழர்களை கடைகளில் அனுமதிப்பதையும் எதிர்ப்பவராக வருவார் மோகன்லால். அதேபோல் தமிழர்களை கடைகளுக்குள் அனுமதிக்கும்போது மோகன்லால் சொன்னதைப் போன்று பல்வேறு பிரச்சனைகளை மலையாளிகள் எதிர்கொள்ள வேண்டிவருவதாக அப்படத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும்.மோகன்லால், கிரண் நடித்த படமொன்றில் லாலின் அண்ணனாக வரும் நெடுமுடிவேணு கோக், பெப்சி மற்றும் அயல்நாட்டு பொருட்களை தனது கிராமத்தில் அனுமதிக்காமல் உள்ளூர் தயாரிப்புகளின் உற்பத்தியை பாதுகாத்து வருவார். அதை குலைக்கும் வில்லன் ஒரு தமிழர். அயல்நாட்டு தயாரிப்புகளை கேரள கிராமத்தில் இறக்குமதி செய்து, உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை சீர்குலைக்கும் வேலைகளை தமிழர்கள் செய்வதாக அப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

மோகன்லால் படங்கள் மட்டுமல்ல. வேறு பல மலையாளப் படங்களிலும் தமிழகத்தையும், தமிழர்களையும் கிண்டல் செய்யும் காட்சிகள் சாதாரணமாக இடம் பெற்றிருக்கும். 'உடையோன்' என்ற படத்தில் வில்லன் வழக்கம் போல ஒரு தமிழன். நாயகனிடம், "தமிழ்நாட்ல மழை பெய்ஞ்சா உங்க கிணத்துல தண்ணி" என்பார். அதற்கு நாயகன், "அதுக்கு உங்க ஊர்ல மழை பெய்ஞ்சாதானே!" என்பார். இதே படத்தில், தமிழ்நாடு வரும் நாயகனிடம், "கரும்பு சாப்பிடுங்க தமிழ்நாட்டு கரும்பு தேன் மாதிரி தித்திக்கும்" என்பார் வில்லன். அதற்கு நாயகன், "உங்க ஊர் கரும்புதான் தித்திக்கும். எங்க ஊர் தண்ணியே கரும்பு மாதிரிதான்" என்பார்.

இவை மலையாளத் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழினச் சித்தரிப்புக்கான மிகச் சில ஆதாரங்களே. யதார்த்தத்தைப் பேசும் மலையாளத் திரைப்படங்களில் இத்தகைய அத்துமீறல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதே சமயம் மொழி எல்லைகளைக் கடந்த கலைஞர்களும் மலையாளத் திரையுலகில் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் படங்களில் தமிழனும் மலையாளியும் சமம்தான் என்று எடுத்துச் சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பிடலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் கேரளப் பெண்களை எப்பொழுதும் முண்டு கட்டி மாராப்பு இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்களோடு காட்சிப்படுத்துவதைப் போல, மலையாளத் திரைப்படங்களில் தமிழர்கள் குறுகிய வட்டத்திற்குள் கீழ்த்தரமாக (சற்று அதிகமாகவே) அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

கலைஞர்கள் இனம், மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்தவர்கள். மானிட நேசம் மட்டுமே அவர்களுடைய நோக்கமாய் இருத்தல் வேண்டும்.காரல் மார்க்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார் - "பகுத்தறிவை வளர்ப்பதற்குக் கலைகள் ஒரு கருவியாகும்". அத்தகைய வலிமையான ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மலையாள - தமிழ் திரையுலகங்கள் வேற்றுமைகளைக் கடந்து சமூக, தனி மனித, கலாசாரப் பிரச்சனைகளை மையப்படுத்தும் திரைப்படங்களைத் தர வேண்டும் என்பதே இவ்விரு மொழித் திரை ஆர்வலர்களின் ஆசையும் வேண்டுகோளும் ஆகும். கலைஞர்கள் கவனிப்பார்களாக !!

Thursday, February 4, 2010

கர்ண மோட்சம் - கலையும் வலியும்.

"அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன் ! பாரெங்கும் கீர்த்தி படைத்தேன். தனக் கர்ணன் என்று பெயரேடுத்தேன் ! நான் தனக் கர்ணன் என்று பெயரேடுத்தேன் ! " என்ற கூத்து வரிகளோடு தொடங்கி, ஒரு அழகான சிறுகதையின் நேர்த்தியோடு, சிறிதும் பகட்டில்லாத காட்சிகளாகவும் உரையாடல்களாகவும் விரிந்து, இறுதியில் காலம் காலமாய் கட்டிக் காப்பாற்றி வந்த கலைகளையும், கலைஞர்களையும் நாகரீக வளர்ச்சி என்ற பெயரால் காவு கொடுத்துவிட்டு நிற்கிற நம் தலைமுறைத் தவறை முகத்திலறைந்தாற் போல் சுட்டிக்காட்டி விட்டு பதினைந்தே நிமிடங்களில் முடிந்து போகிறது - "கர்ண மோட்சம்".

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியின் மாணவர் முரளி மனோகர் இயக்கிய 'கர்ண மோட்சம்' தேசிய அளவில் 2008ம் ஆண்டிற்கான சிறந்த கலை மற்றும் பண்பாட்டுக் குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருக்கும் கூத்துக் கலையின் இன்றைய நிலையையும், கூத்துக் கலைஞர்களின் வறுமை பீடித்த வாழ்க்கையையும் எவ்வித மிகையும் இல்லாமல் மிக நுட்பமான காட்சியமைப்புகளாய் இக்குறும்படம் பதிவு செய்திருக்கிறது. உயிரோட்டமான கதைக் கருவும், நிதர்சனமான வசனங்களும், ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையும் ஒரு குறும்படத்திற்குரிய எல்லைகளைத் தாண்டி கனமான
அதிர்வுகளையும் ஒருவித குற்ற உணர்ச்சியையும் நமக்குள் உருவாக்குகின்றன.

கதை இதுதான். கர்ண மோட்சம் கூத்தில் கர்ணன் வேஷம் கட்டும் கோவிந்தன், ஒரு பள்ளியில் கூத்து நடத்துவதற்காக கிராமத்திலிருந்து தனது பத்து வயது மகனுடன் சென்னைக்கு வருகிறார். எதிர்பாராத விதமாக பள்ளி நிர்வாகி ஒருவர் இறந்து போனதால் அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. 'கூத்து கட்டினால் பணம் கிடைக்கும். தன் மகன் ஆசைப்பட்ட கிரிக்கெட் மட்டையை வாங்கித் தரலாம்' என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்த கோவிந்தனின் கனவு தகர்ந்து போகிறது. ஊருக்குப் போகக்கூட பணமின்றி, பள்ளித் தலைமையாசிரியரின் உதவிக்காக, ஒரு டீக்கடையின் வாசலில் பசியோடு தன் மகனுடன் காத்திருக்கிறார். அதே கடையில், முதலாளியின் திட்டுகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் வாய் பேச முடியாத சிறுமி ஜானகி, தன் முதலாளிக்குத் தெரியாமல் கர்ண வேஷத்தில் இருக்கும் கோவிந்தனுக்கு இட்லி கொண்டு வந்து கொடுக்கிறாள். இதனால் நெகிழ்ந்து போன கோவிந்தன் ஜானகிக்கு கூத்துக் கலையின் குரு வணக்கத்தையும்,
முதல் அடவுப் பாடத்தையும் கற்றுத் தர ஆரம்பிக்கிறார். ஆனால் பாதியிலேயே கடை முதலாளி ஜானகியை அடித்து இழுத்துச் செல்ல, மனம் வெறுத்துப் போய் தன் கிரீடத்தையும் ஆபரணங்களையும் சாலையில் எதிர்ப்படும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட்டு தன் ஊரை நோக்கி நடப்பதாக கதை முடிகிறது.

படம் நெடுக ஏராளமான திரைக்கதை உத்திகளைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலேயே கோவிந்தனின் மகன் சாலையில் கிடக்கும் காலி பெப்ஸி பாட்டிலை எடுத்து குடிக்க முயல்வதும், டீக்கடையில் ஒரே ஒரு வடையை வாங்கித் தன் மகனிடம் கொடுத்துவிட்டு, கோவிந்தன் வெறும் தண்ணீரோடு திருப்திப்பட்டுக் கொள்வதும் கூத்துக் கலைஞர்களின் வறுமையைச் சொல்லாமல் சொல்கிறது. கர்ணன் வேஷம் கட்டிக்கொண்டு, சிறுமியிடம் யாசகமாக இட்லி வாங்கிச் சாப்பிடுவது, நிஜக் கர்ணர்கள் எதையும் கொடுக்கிற நிலையில் இல்லை என்பதை உணர்த்துகிறது. கூத்தின் முக்கிய அம்சமே கூத்துக் கலைஞர்கள் பாடும் பாடல்கள்தாம் என்றாலும், தன் கலையைக் கற்றுக் கொள்ள முன்வந்த ஒரே காரணத்திற்காக வாய் பேச முடியாத பெண்ணுக்குக் கூட கூத்துக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தர கோவிந்தன் முயல்வது, தான் கற்ற கலையை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற கூத்துக் கலைஞர்களின் ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ஜானகிக்கு கூத்து கற்றுத் தரும் அதே வேளையில், கோவிந்தனின் மகன் ரோட்டில் கிடந்த பொம்மை செல்போனில் டெண்டுல்கரிடம் நலம் விசாரிப்பதும், பெப்ஸி உமாவிடம் விஜய் படப் பாடல் போடச் சொல்லி விளையாடுவதும், இன்றைய சூழலில் கூத்துக் கலைஞர்களின் வாரிசுகளுக்கு அக்கலையைக் கற்றுக் கொள்வதற்கு சிறிதும் ஆர்வமில்லை என்பதை தெளிவாக்குகிறது. இறுதிக்காட்சியில் கோவிந்தன் தனது கிரீடத்தையும், ஆபரணங்களையும் ரோட்டில் எதிர்படும் சிறுவர்களிடம் கொடுத்து விட்டு நடக்கும் காட்சி, கோவிந்தனும் இனி கூத்து கட்டுவதை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடுவாரோ என்ற பதபதப்பை உருவாக்குகிறது.

திரைக்கதைக்கு அடுத்து படத்தின் முக்கியமான அம்சம் எஸ். ராமகிருஷ்ணனின் வசனம். எந்தவித மேதவித்தனமும் இல்லாமல், கூத்துக் கலைஞர்களின் வேதனைகளை அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே உரையாடல்களாக வடித்திருப்பது பாராட்டுக்குரியது. "எத்தனையோ பேரு உசுரைக் குடுத்து வளர்த்த கலையை, இன்னிக்கி டிவிப்பொட்டி முழுங்கிடுச்சு" என்பது போன்ற வசனங்கள் சாட்டையடியாய் உறைக்கின்றன.

தற்போதைய தேசிய விருதிற்கு முன்பாகவே கர்ணமோட்சம் தமிழக அரசின் 2005 -2006 ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பிரிவில் சிறந்த இயக்கம் , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பதனிடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப்
பெற்றுள்ளது. அதே ஆண்டில் கேரளாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளது. அத்துடன் திருப்பூரில் நடைபெற்ற குறும்பட போட்டியில் முதல் பரிசும், சென்னையில் உள்ள அஸ்விதா என்ற அமைப்பு நடத்திய நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த இயக்கத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. மேலும் தினமணியும் நெய்வேலி புத்தகசந்தையும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில் பதினைந்தாயிரம் ருபாய் பணத்துடன் கூடிய முதல் பரிசை வென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற International Students Film Festival,.First Frame 2008 என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. ஜெர்மன், இஸ்ரேல் ,போலந்து, பிரான்ஸ், செர்பியா. துருக்கி, தைவான், சிங்கப்பூர் , ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்ளிட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து மொத்தம் 91 படங்கள் திரையிடப்பட்டன. பர்ஸ்ட் பிரேம் திரைப்பட விழாவில் தமிழ் படம் ஒன்று இந்தியாவின் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இக்குறும்படத்தை இயக்கிய திரைப்படக் கல்லூரி மாணவரான முரளி மனோகர் தற்போது இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கர்ண மோட்சம் மட்டுமின்றி ஜெமினி திரைப்பட நிறுவனத்தில் மெஸ் நடத்திய மணியம் பற்றி "அக்காலம்" என்ற பெயரில் ஒரு ஆவணப்படமும் இயக்கியிருக்கிறார். இக்குறும்படத்தின் இசையமைப்பாளரான இரா.பிரபாகர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். முக்கிய வேஷத்தில் கூத்துக் கலைஞராக நடித்தவர் கூத்துபட்டறையில் பயின்ற ஜார்ஜ்.

"அசல் மகா பாரதத்தைப் பாமர மக்களுக்கும் புரியுற மாதிரி எளிமையா தெருக் கூத்துகளில்தான் சொல்வாங்க. முன்னெல்லாம் அதுக்குத் தெரு நிறையக் கூட்டம் வரும். ஆனா, சேட்டிலைட் சேனல்கள் முன்னாடி போட்டி போட முடியாம அவங்க முடங்க வேண்டிய கட்டாயம். தப்பிப் பிழைக்க வழி தெரியாம ராமனா நடிக்கிறவர், 'என் பேரு படையப்பா'னு குத்து டான்ஸ் போட ஆரம்பிச்சார். அபார திறமை தேவைப்படும் ஒரு நுணுக்கமான கலை, அழிவின் விளிம்பில் இருப்பதைப் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அதுதான் 'கர்ண மோட்சம்' படத்தின் மையக் கரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்தான் படத்துக்குக் கதை, வசனம். தேசிய விருது போக, கனடாவில் உலகத் தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகள், இந்திய அளவில் மூன்று விருதுகள், மாநில விருதுகள்னு இதுவரை 25 விருதுகளுக்கு மேலே குவிச்சிருக்கார் எங்க கர்ணன். படிக்கப் பணம் இல்லாம நான் கஷ்டப்பட்டபோது எல்லாம் நான் கேட்காமலேயே நூறு, இருநூறுன்னு பணத்தை என் கையில் திணிச்ச என் செட்டி மண்டபம் கிராம மக்களுக்கு இந்தப் படத்தைக் காணிக்கையாக்குறேன்!'' என்று நெகிழ்கிறார் முரளி மனோகர்.

"கர்ண மோட்சம்" குறும்படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.