சினிமா நடிகர்களுக்கு இது போதாத காலம் போலும். சென்ற வாரம்தான் இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகப் பேசி சிவசேனாவின் எதிர்ப்பையும் மிரட்டல்களையும் சம்பாதித்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கும் மேலாக மும்பை அரசியல் மற்றும் திரைக்களங்களை சுறாவளி போல் சுழற்றி அடித்துக் கொண்டிருந்த அப்பிரச்சினை, தற்போது தான் சற்று ஓய்ந்தாற் போலிருந்தது. ஆனால் அதற்குள் மற்றுமொரு புயல் தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. இந்தமுறை எக்குத்தப்பாகப் பேசி மாட்டிக் கொண்டிருப்பது பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் - ஜெயராம்.
ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் மலையாள திரைப்படம் - ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் (Happy Husbands). இத்திரைப்படத்தில் தன் வீட்டு வேலைக்காரியை "சைட்" அடிக்கும் கணவன் கதாப்பாத்திரத்தில் ஜெயராம்
நடித்திருக்கிறார். பட வெளியீட்டையொட்டி மலையாளத் தொலைக்காட்சியான ஏசியாநெட்டிற்கு அளித்த நேர்காணலில், "நிஜ வாழ்க்கையில் நீங்கள் வீ்ட்டு வேலை பார்க்கும் பெண்ணை சைட் அடித்துள்ளீர்களா?" என்ற கேள்விக்கு, "என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்" என்று கூறியிருந்தார். ஜெயராமின் இந்த வெளிப்படையான பதில்தான் அவரைச் சிக்கலில் மாட்டி வைத்திருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் போதெல்லாம் தன்னை "கும்பகோணத்துத் தமிழன்" எனக் குறிப்பிடும் ஜெயராமின் இந்த நேர்காணல் பற்றிய விஷயம் பத்திரிக்கைகளில் பரபரப்பாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, சென்னையில் உள்ள அவரது வீடும் காரும் தாக்கப்பட்டது. தமிழ் திரையுலகத்திலிருந்தும் ஜெயராமின் கருத்துக்குக் கண்டனக் குரல்கள் கேட்கத் தொடங்கின. தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஷா நிவாஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சர்வதேச மாநாட்டிலும் ஜெயராமின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயராம் "தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது நான் செய்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எதார்த்தமாக சொன்ன ஒரு ஜோக். கண்டிப்பாக அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது அல்ல. இது மனசாட்சி மீது ஆணை. இருந்தும் இது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை முக்கியமாக தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன்." எனத் தெரிவித்தார். முதல்வர் கலைஞரும் பிரச்சினையை இத்தோடு விட்டு விடுமாறு அறிக்கை மூலம் அறிவுறுத்த சற்று அமைதி திரும்பியிருக்கிறது.
இந்த குறிப்பிட்ட நேர்காணலில், ஜெயராம் குறிப்பிட்டதை கொஞ்சம் அதீத நகைச்சுவை உணர்வுடன் சொன்னதாகவே எடுத்துக் கொண்டாலும், தற்போது கிளம்பியிருக்கும் இப்பிரச்சனை மலையாளத் திரைப்படங்களில் தமிழின சித்தரிப்புகளைப் பற்றிய ஆய்வுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
கேரளத் திரையுலகில் தமிழின் ஆதிக்கம் அதிகம். மலையாளப் படங்களை விட நேரடித் தமிழ்ப் படங்கள் வியாபாரத்திலும் வசூலிலும் முன்னணி வகிக்கின்றன. பழசிராஜா திரைப்படத்திற்காக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த நடிகர் மம்மூட்டி இதனை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். கேரளக் கல்லூரி, திரையுலக விழாக்களிலும் கூட அதிகமாக இடம் பெறுபவை தமிழ்த் திரைப்படப் பாடல்களே.இது ஒருவகையில் கேரளத் திரையுலகிற்கு ஒரு அசௌகரியமான விஷயமானதகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட கேரளாவில் தமிழ்த் திரைப்படங்களை நேரடியாக வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை, முன்னணி நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் மலையாள திரை அமைப்பான "அம்மா" வினால் வலுவாக எழுப்பப்பட்டு அடங்கியது. இத்தகைய தொழில்ரீதியான காரணங்கள் மட்டுமின்றி அடிப்படையிலேயே தமிழர்கள் சுத்தமில்லாதவர்கள், மந்தபுத்தி உடையவர்கள் என்ற ரீதியிலேயே மலையாள அறிவிஜீவிகளின் மனப்பதிவு உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த மனோபாவம் இந்தியாவே கொண்டாடும் பல அறிவுஜீவி மலையாள இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். முக்கியமாக மோகன்லால் திரைப்படங்களில்.
இரண்டு முறை தேசிய விருது பெற்ற மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் பல படங்களில் தமிழர்களைச் சித்தரிக்கும் விதம் சற்று கடுமையாகவே இருக்கும். உதாரணமாக பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஸ்ரீனிவாசன், பார்வதி நடித்த படம் 'அக்கரை அக்கரை அக்கரை'. அமெரிக்காவில் நடைபெறும் கதையிது. அங்குள்ள பிரமாண்ட கட்டிடங்களை பார்க்கும் மோகன்லால் ஸ்ரீனிவாசனிடம், "எல்.ஐ.சி. பில்டிங்கின் முன்னால் நின்று வாய் பிளந்து பார்க்கும் தமிழர்கள் இதை பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்துடுவாங்களே" என்பார். தமிழர்களை மட்டம் தட்டும் இந்த வசனங்களை மிக உற்சாகமாக பேசியிருப்பார் மோகன்லால். 'நரன்' திரைப்படத்தில் தமிழில் பெயர் பலகை வைப்பதையும், தமிழர்களை கடைகளில் அனுமதிப்பதையும் எதிர்ப்பவராக வருவார் மோகன்லால். அதேபோல் தமிழர்களை கடைகளுக்குள் அனுமதிக்கும்போது மோகன்லால் சொன்னதைப் போன்று பல்வேறு பிரச்சனைகளை மலையாளிகள் எதிர்கொள்ள வேண்டிவருவதாக அப்படத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும்.மோகன்லால், கிரண் நடித்த படமொன்றில் லாலின் அண்ணனாக வரும் நெடுமுடிவேணு கோக், பெப்சி மற்றும் அயல்நாட்டு பொருட்களை தனது கிராமத்தில் அனுமதிக்காமல் உள்ளூர் தயாரிப்புகளின் உற்பத்தியை பாதுகாத்து வருவார். அதை குலைக்கும் வில்லன் ஒரு தமிழர். அயல்நாட்டு தயாரிப்புகளை கேரள கிராமத்தில் இறக்குமதி செய்து, உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை சீர்குலைக்கும் வேலைகளை தமிழர்கள் செய்வதாக அப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
மோகன்லால் படங்கள் மட்டுமல்ல. வேறு பல மலையாளப் படங்களிலும் தமிழகத்தையும், தமிழர்களையும் கிண்டல் செய்யும் காட்சிகள் சாதாரணமாக இடம் பெற்றிருக்கும். 'உடையோன்' என்ற படத்தில் வில்லன் வழக்கம் போல ஒரு தமிழன். நாயகனிடம், "தமிழ்நாட்ல மழை பெய்ஞ்சா உங்க கிணத்துல தண்ணி" என்பார். அதற்கு நாயகன், "அதுக்கு உங்க ஊர்ல மழை பெய்ஞ்சாதானே!" என்பார். இதே படத்தில், தமிழ்நாடு வரும் நாயகனிடம், "கரும்பு சாப்பிடுங்க தமிழ்நாட்டு கரும்பு தேன் மாதிரி தித்திக்கும்" என்பார் வில்லன். அதற்கு நாயகன், "உங்க ஊர் கரும்புதான் தித்திக்கும். எங்க ஊர் தண்ணியே கரும்பு மாதிரிதான்" என்பார்.
இவை மலையாளத் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழினச் சித்தரிப்புக்கான மிகச் சில ஆதாரங்களே. யதார்த்தத்தைப் பேசும் மலையாளத் திரைப்படங்களில் இத்தகைய அத்துமீறல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதே சமயம் மொழி எல்லைகளைக் கடந்த கலைஞர்களும் மலையாளத் திரையுலகில் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் படங்களில் தமிழனும் மலையாளியும் சமம்தான் என்று எடுத்துச் சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பிடலாம்.
தமிழ்த் திரைப்படங்களில் கேரளப் பெண்களை எப்பொழுதும் முண்டு கட்டி மாராப்பு இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்களோடு காட்சிப்படுத்துவதைப் போல, மலையாளத் திரைப்படங்களில் தமிழர்கள் குறுகிய வட்டத்திற்குள் கீழ்த்தரமாக (சற்று அதிகமாகவே) அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
கலைஞர்கள் இனம், மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்தவர்கள். மானிட நேசம் மட்டுமே அவர்களுடைய நோக்கமாய் இருத்தல் வேண்டும்.காரல் மார்க்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார் - "பகுத்தறிவை வளர்ப்பதற்குக் கலைகள் ஒரு கருவியாகும்". அத்தகைய வலிமையான ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மலையாள - தமிழ் திரையுலகங்கள் வேற்றுமைகளைக் கடந்து சமூக, தனி மனித, கலாசாரப் பிரச்சனைகளை மையப்படுத்தும் திரைப்படங்களைத் தர வேண்டும் என்பதே இவ்விரு மொழித் திரை ஆர்வலர்களின் ஆசையும் வேண்டுகோளும் ஆகும். கலைஞர்கள் கவனிப்பார்களாக !!
4 comments:
மலையாளிகள் நிறைய மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். அவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் தைரியமாக சாப்பிடக்கூட போக முடியாது. நம் தமிழர்கள் நடத்தும் ஹோட்டல்களுக்கு சென்று பார்த்தால் எவ்வளவு சுத்தமாகவும், திவ்யமாகவும் இருக்கும். சுத்தத்தை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை.
நண்பரே!
வணக்கம்.
”குமுதம்” வார இதழில் முதல் முதலாக ஜெயராமின் அவதூறு பேச்சை நான் பதிவு செய்த பின்னர்தான் மற்ற தமிழ்ப்பத்திரிகைகள் அந்த செய்தியை வெளியிட்டன.
ஜனவரி 25.ம் தேதியன்று இரவு ஜெயராம் அவதூறாக பேசிய நிகழ்ச்சியைப்பார்த்து விட்டு அன்
றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. பின்னர் ஜெயராமை தொடர்பு கொண்டு அதுவிஷயமாகப்பேசியபோது நிகழ்ச்சியில் கூறிய கருத்துகளுக்கு அவர் வருத்தப்பட்டதாகத்தெரியவில்லை. அதன் பின்னரே மலையாளப்படங்களில் நாம் எவ்விதம் இழிவுபடுத்தப்படுகிறோம் என்பதை நினைத்தும் இந்த நிகழ்ச்சியை இணைத்தும் செய்தி தயாரானது.
நீங்கள் குறிப்பிட்டது போல் நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். நமது எதிர்ப்பார்பெல்லாம் இனிமேலாவது தமிழர்களை நையாண்டி செய்யும் காட்சிகள் மலையாளப்படங்களில் வராமலிருக்க அவர்கள் முன்வரவேண்டும் என்பதே.
நண்பரே!
வணக்கம்.
”குமுதம்” வார இதழில் முதல் முதலாக ஜெயராமின் அவதூறு பேச்சை நான் பதிவு செய்த பின்னர்தான் மற்ற தமிழ்ப்பத்திரிகைகள் அந்த செய்தியை வெளியிட்டன.
ஜனவரி 25.ம் தேதியன்று இரவு ஜெயராம் அவதூறாக பேசிய நிகழ்ச்சியைப்பார்த்து விட்டு அன்
றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. பின்னர் ஜெயராமை தொடர்பு கொண்டு அதுவிஷயமாகப்பேசியபோது நிகழ்ச்சியில் கூறிய கருத்துகளுக்கு அவர் வருத்தப்பட்டதாகத்தெரியவில்லை. அதன் பின்னரே மலையாளப்படங்களில் நாம் எவ்விதம் இழிவுபடுத்தப்படுகிறோம் என்பதை நினைத்தும் இந்த நிகழ்ச்சியை இணைத்தும் செய்தி தயாரானது.
நீங்கள் குறிப்பிட்டது போல் நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். நமது எதிர்ப்பார்பெல்லாம் இனிமேலாவது தமிழர்களை நையாண்டி செய்யும் காட்சிகள் மலையாளப்படங்களில் வராமலிருக்க அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்பதே.
-kumudamsindhu@gmail.com
திருவட்டாறு சிந்துகுமார்
Bro Jayaram Tamilan Seeman oru aalu antha naiya perusa pesurinka
Post a Comment