Friday, December 28, 2007

சமைக்கப் பழகுங்க !!!

சில கேள்விகள் !!

நீங்க எப்பவாச்சும் உங்க வீட்டு சமையல்கட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கீங்களா ? உங்க அம்மா எப்படி சமையல் பண்ணுராங்கன்னு பாத்திருக்கீங்களா ?

இந்த கேள்விகளுக்கு உங்க பதில் 'இல்லை' அப்படின்னா, நீங்க நம்ம கட்சி.. இந்த பதிவு உங்களுக்காகதான்.. மேலே படிங்க..

நானும் இப்படித்தான். தூத்துக்குடியில் படிக்கும் போதும் சரி, படிச்சு முடிச்சு ஒரு வருஷம் அங்கேயே வேலை பார்த்தப்பவும் சரி.. எங்க வீட்டு சமையல்கட்டோட நீள அகலம் கூட என்னன்னு எனக்குத் தெரியாது..

சொந்த ஊர், அக்கறையான அம்மா சமையல், ராஜ வாழ்க்கை..

அம்மா சமையல்னு சொன்ன உடனே, மகாபாரதக் கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.

அந்த காலத்துல 'துர்வாசர்' அப்படினு ஓரு முனிவர் இருந்தார், மிகப்பெரிய ரிஷி. ஆனா மனுஷன் மகா கோபக்காரர். அவருக்கு பிடிக்காத காரியங்களை யாராவது பண்ணினா, அவ்வளவுதான் !! 'இந்தா பிடி' னு, தேர்தல் வாக்குறுதி மாதிரி சாபத்தை அள்ளிக் குடுத்திடுவாரு.. இதனாலயே துர்வாசர்னா எல்லாருக்கும் ஒரு பயம்..

ஒருநாள், இந்த கோபக்கார முனிவர் கிருஷ்ண பகவானோட வீட்டுக்கு சாப்பிடப் போனாரு. துர்வாசருக்கு ஓரு பழக்கம் உண்டு. அவர் மனசுல என்ன நினைச்சுருக்காரோ அதை செஞ்சு பரிமாறுனா மட்டும்தான் சாப்பிடுவாரு. இல்லைனா, வழக்கம் போல சாபம்தான்..

துர்வாசரோட இந்த வழக்கம் தெரிஞ்சதுனால, எங்கே சாப்பாடு சரியில்லைன்னா முனிவர் கோபப்பட்டு ஏதாவது சாபம் குடுத்திடுவாரோனு கிருஷ்ணருக்கு ஒரே பயம். உடனே, தன்னோட ஆஸ்தான சமையல்காரனைக் கூப்பிட்டு, துர்வாசர் சாப்பிட வந்திருப்பதையும், முக்கியமா அவரோட கோபத்தைப் பத்தியும் சொல்லி, எப்படியாவது, '' அவரோட மனசுல நினைச்சு வச்சுருக்குறத சமைச்சிடு'' னு சொல்லிட்டார். சமையல்காரனும் தலையாட்டிட்டுப் போயிட்டான்.

மதியம் சாப்பாட்டு வேளை வந்தது. முனிவர் சாப்பிட உட்கார்ந்தார். இலையைப் பார்த்த உடனே அவருக்கு ஆச்சர்யம் தாங்கலை. ஏன்னா அவர் மனசுல நினைச்சபடியே பொரியல், கூட்டு, இனிப்புனு எல்லாமே அவருக்கு பிடிச்ச மாதிரியே இருந்தது. அவர் ஆச்சர்யத்தோட ' எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரி எப்படி சமைக்க முடிஞ்சது' னு கேட்டார். உடனே சமையற்காரன் கையைக் கட்டிக்கிட்டே சொன்னான். ''உங்க அம்மா யாரு ? அவங்க என்ன சமைப்பாங்கன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேங்க.. அந்த சமையலைச் செஞ்சா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்கன்னு அதே மாதிரி செஞ்சேன் !!'னு சொன்னான். முனிவரும் சந்தோசமா சாப்பிட்டுட்டு வரம் குடுத்துட்டுப் போனாரு..

நிஜம்தான் இல்ல ! சாப்பாட்டோட அம்மாவோட விரலையும் சேர்த்துதானே ருசிச்சிருக்கோம்..

2004ல் நான் தூத்துக்குடியை விட்டு வெளியே வர வேண்டியதாயிடுச்சு.. அப்பகூட சமைக்கக் கத்துக்கணுமேன்ற ஆர்வம் கொஞ்சம்கூட இல்ல.. சென்னையில் இருந்த இரண்டு வருஷமும் ஹோட்டல் சாப்பாடுதான். முதல்ல கொஞ்சம் பிடிக்காத மாதிரி இருந்தாலும், அப்புறம் பழகிடுச்சு.. ஒரு நாளைக்கு ஒரு இடம், ஒரு ஹோட்டல்னு கொஞ்சம்கூட சலிப்பே இல்லாமல் திரிஞ்சிருக்கேன். அதுக்கப்புறம் விப்ரோல சேர்ந்து பெங்களுர்ல ஆறு மாசம். அப்பகூட கெஸ்ட்அவுஸ்தான் படியளந்தது.

2007 ஜனவரி கடைசியில இங்கிலாந்து வந்திருந்தேன். மூணு மாசம் - மே வரை. அப்பவும் சமையல் கத்துக்காமலேயே தப்பிச்சுட்டேன். :-) என்னோட ரூம்மேட் நல்லா சமைப்பான். அவனுக்கு காய் வெட்டிக் குடுத்தே மூணு மாசத்தைக் கழிச்சேன். திரும்பவும் இந்தியா.. பெங்களுர் கெஸ்ட்அவுஸ் வாழ்க்கை.. என்ஜாய் மாடி.. (கன்னடத்தில் மாடி - பண்ணு அப்படின்னு அர்த்தம்)

காத்து எப்பவும் ஒரே திசையில அடிக்குமா என்ன ?

போன ஜுன்ல திரும்பவும் இங்கிலாந்து. இந்த முறை ஆபத்பாந்தவன் யாருமில்லை. அப்பவே என் வயித்துப் பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு...

முதல் ஒரு வாரம் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். நான் பட்டபாடு.. அப்பப்பா.. பாரதியார் பாடியிருப்பாரே ! 'தாளம் படுமோ ! தறிதான் படுமோ !' னு. அதே பாடுதான்..

ஜுன் மாசம் என்பதால, குளிர் அதிகமில்லை. பிரச்சனை போஜனம் மட்டுமே !!

என்னோட மெனு இதுதான்.

காலை - பால், ரொட்டி, மக்காசோளம்,
மதியம் - சப்வே சாண்ட்விச்.
ராத்திரி - கே.எப்.சி சிக்கன்.

மூணு நாளைக்கு மேல தாங்கலை. சாதத்தைக் கண்ணால் பார்த்தாக் கூட போதும்னு ஆயிடுச்சு..

நான் தங்கியிருந்தது போர்ன்மவுத் (Bournemouth) அப்படினு ஓரு கடற்கரை நகரம். லண்டனிலிருந்து 2 மணி நேர பயணத்தொலைவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலம்.

முக்கியமா பேச்சிலர் பார்டிக்கு (Stag Party) ரொம்ப பிரசித்தி பெற்ற இடம். ஆனா மருந்துக்கு கூட நம்ம ஊர் ஹோட்டல் ஒண்ணு கிடையாது..

வேற வழியே இல்லை. நேரா ஹோட்டல் ஹெட்குக் கிட்ட போய் சரணாகதி.

அவர்கிட்ட நிலைமையை சொல்லி, குறைந்தபட்சம் ராத்திரி ஒருவேளைக்காவது சாதம் வைக்க சொன்னேன். (இதெல்லாம் தேவையா ? :-) )

என்னைப் பாத்தா பரிதாபமா இருந்திருக்கணும் அவருக்கு. சரின்னுட்டார். மறுநாள் ராத்திரி, ஏதோ வெப்சைட்டைப் பாத்து குறிப்பெடுத்து, சாதமும் பருப்பு குழம்பும் பண்ணி வைத்திருந்தார். அன்றையிலிருந்து அடுத்த நாலு நாள், என்னை வச்சு ஒரு வழியா தமிழ் சமையல் கத்துக்கிட்டார்.

நான் - வலுக்கட்டாயமாய் அகப்பட்டுக்கொண்ட சோதனைச் சுண்டெலி. !!! :-)

போர்ன்மவுத் - ஒரு சுற்றுலாத்தலம் என்பதால், ஹோட்டல் வாடகை எல்லாமே கொஞ்சம் அதிகம்தான். அதனால ஹோட்டல காலி பண்ணிட்டு (சமைக்க தெரியாத) ப்ரெண்ட்ஸ் மூணுபேர் சேர்ந்து ஒரு ப்ளாட் வாடகைக்கு எடுத்தோம்.
குத்துமதிப்பா நாலு பாத்திரங்களை வாங்கினோம். யாருக்கும் என்ன பண்ணனும் தெரியாது.. இருந்தாலும் எதாவது பண்ணனுமே ! இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சா பசிக்குமே !! :-)

கூகுளாண்டவர் அருளால் ஒரு தமிழ் வெப்சைட் கிடைச்சது - அறுசுவை.காம் (http://www.arusuvai.com/). பரிட்சைக்கு தயார் பண்ணுகிற மாதிரி உட்கார்ந்து படித்தோம். பருப்புக்கு பதிலா, உப்பு நிறைய போட்டு முதன்முதலா செஞ்ச சாம்பாரோட ருசி இன்னமும் நாக்கிலேயே இருக்கு (அவ்வளவு உப்பு !!)



நீச்சல் பழகணும்னா முதல்ல தண்ணில விழணும்னு சொல்றது போல, தினமும் கையை சுட்டுக்கிட்டாவது எதாவது பண்ண ஆரம்பிச்சோம். முதல்ல கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், இப்ப கொஞ்சம் தேவலாம். சாம்பார், ரசத்தைத் தாண்டியும், புதுசா முயற்சி பண்ணி பார்க்கிறோம்..

தெரியாத ஊருல இவ்வளவு தூரம் கஷ்டப்பட்ட பிறகுதான் தோணுது. நம்ம ஊருல இருக்கும் போதே ஏன் கத்துக்கலைன்னு.. ஒருவேளை 'நம்ம எங்கே கரண்டி பிடிக்கப் போறோம்?' அப்படின்ற அலட்சியமோ ?

அம்மாகிட்ட இருந்து பொண்ணுங்க மட்டுமில்ல பசங்களும் சமைக்கக் கத்துக்குறது நல்லது. நாளைக்கு எங்கே இருப்போம்னு யாருக்குத் தெரியும் ?

அதனாலதான் அனுபவஸ்தன் சொல்றேன்..

.NET 3.0, Silverlight எல்லாம் இருக்கட்டும், முதல்ல சமைக்க பழகுங்க !!

நான்

வானத்தையே
வில்லாய் வளைத்தவன்
ஏனோ உன்
புருவ வளைவுகளில்
ஒடிந்து போனேன்.

:-)

Thursday, December 27, 2007

சென்றது மீளாது !!

மகாகவியின் ஞானப் பாடல்களுள் ஒன்று .. ...

சென்றதினி மீளாது மூடரே ! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

-- மகாகவி பாரதி

Wednesday, December 26, 2007

நீதான் தந்தாய் !!

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை' தொகுப்பிலிருந்து..

அற்புதமான காதலை
மட்டுமல்ல !

அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.

நளவெண்பா - இலக்கியத் தொடர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலே
இனிதாவதெங்கும் காணோம்

-- மகாகவி பாரதியார்.

மொழி என்பது நாகரிக வாழ்வின் உச்சம். ஒரு இனத்தை அடையாளம் காட்டக் கூடியது மொழி. ஒரு மொழியானது கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமலிருக்க, அம்மொழியைப் பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, அம்மொழியின் நீட்சியும், நெகிழும் தன்மையும், காலத்திற்கேற்ப புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் திறனும், எளிமையும் இன்றியமையாதது.

சென்ற மாதம் 'அவுட்லுக்' பத்திரிக்கையில் வந்த குறிப்பு ஒன்று கலவரமூட்டுகிறது.

பதினான்கு நாட்களுக்கு ஒரு மொழி உலகில் எங்கோ ஒரு மூலையில் இறந்து கொண்டிருக்கிறதாம். இது அழியும் தாவரங்கள், பறவைகள், மீன்களின் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாம். அந்தமானில் ஒரு மொழியை ஏழே ஏழு பேர் மட்டும்தான் பேசுகிறார்களாம். பல பழங்குடிகளின் மொழிகள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றனவாம்.

அப்படியானால் நம் தமிழ் மொழியின் நிலை ? ?

ஆறுதலளிக்கும் வகையில் ஒரு ஆய்வுக்குறிப்பு இந்தியாவில் எந்த மொழி அழிந்தாலும் இந்தியும் தமிழும் எக்காலத்தும் நிலைபெறும் என்கிறது.

அன்பரசர் இயேசு கிறிஸ்து தன் போதனைகளைச் சொன்ன ஹீப்ரு மொழி, புத்த பகவான் தன் கருத்துக்களைச் சொன்ன பாலி மொழி உட்பட எத்தனையோ பண்டைய மொழிகள் வழக்கிழந்து, வடிவிழந்து தங்கள் முகங்களைத் தொலைத்த நிலையில் இன்றும் தன் வடிவு மாறாமல் உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது நம் தமிழ்மொழி. இயல்பிலேயே வளமையும் நீட்சியும் கொண்டது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்மொழி வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி ஒப்புயர்வற்ற காப்பியங்களையும், காவியங்களையும் இயிற்றியுள்ளனர். அன்பையும், காதலையும், வாழ்க்கை நெறிகளையும் விளக்கும் கற்பனைச்செறிவு மிக்க இந்த இலக்கியங்களே தமிழன்னையின் பொக்கிஷமாகும்.

இத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களைக் கொஞ்சமும் சிதைவில்லாமல், வரும் தலைமுறைக்கு பரிமாற்றவும், எல்லோரும் எளிதில் படித்துப் பயன் பெறும் வகையிலும் தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி இணையம் வழி வழங்கும் திட்டங்களைப் பலரும் செய்து வருகின்றனர். (உதாரணம் - மதுரைத்திட்டம் )

'ஊர் கூடியிழுத்தால் தேர் நகரும்' என்பது போல, எனது பங்களிப்பாய், எனக்குப் பிடித்த தமிழ் இலக்கியங்களை எனது புரிதலின்படி உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தொடரின் நோக்கமாகும்.

இந்த வகையில், இனிவரும் பதிவுகளில் முதன் முதலாக நாம் அலசப் போகிற இலக்கியம் புகழேந்திப் புலவரின் நளவெண்பா.

நளவெண்பாவின் எளிமையும், கற்பனைச்செறிவும், உவமைச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை. அதனாலேயே, எனது முதல் முயற்சிக்கு நளவெண்பாவை நாடினேன்.

சரி, அடுத்த பதிவில் நளவெண்பாவின் கதைச்சுருக்கத்தையும், நூல் அமைப்பையும், நூலாசிரியரைப் பற்றியும் பார்க்கலாம்.

தொடரும் பதிவுகளில் ஒவ்வொரு வெண்பாவின் பொருளையும், சுவையையும் விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள்.

மீண்டும் சந்திப்போம் !!

Monday, December 24, 2007

பூங்கொடியே!!

சமீபத்தில் படித்த ஒரு கவிதை.

கவிஞர் மீராவின் ' கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து விடுபட்ட ஒன்று . . .

பூங்கொடியே!
உனக்கு ஒரு பூ
வாங்கித் தருகிறேன்..

முதன்முதலாக
தானம்தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக்கதவைத்
தட்டிய மாதிரி..

Sunday, December 16, 2007

இரவின் ருசி !!!

ஏனோ ! தெரியவில்லை. இன்றைய இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை, அல்லது தூக்கம் பிடிக்கவில்லை. நாள்காட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை என்ற நல்ல செய்தியைச் சொல்லியது. பொதுவாகவே எனது சனிக்கிழமை இரவுகள் சற்று நீளமானவை. ஆனாலும் இன்று போல் நள்ளிரவு தாண்டியும் நீண்டதில்லை.

எத்தனையோ நாட்கள், பள்ளித்தேர்வுகளுக்காகவும், அலுவலகப் பணிச்சுமையினாலும் நள்ளிரவுவரை விழித்திருக்கிறேன். அதிகபட்சம் அதிகாலை 2 மணிவரை. அதற்குள்ளாகவே நித்திரைதேவியின் அருள் பூரணமாகக் கிடைத்திருக்கும். நள்ளிரவைத் தாண்டிய பின்னிரவின் முகம் நேற்றுவரை நான் அறியாதது.

"விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது" என்ற புத்தரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து போகின்றன. இதுவரை உறங்கியிருந்த ஒவ்வொரு இரவும் புகையினைப் போல காற்றில் நழுவிக் கரைந்துவிட்டிருக்கின்றது. உறக்கமற்ற இந்த நீண்ட இரவு ஒரு தனித்துவமான சுகானுபவத்தைத் தருகிறது. குளத்தினுள் எறியப்பட்ட கல்லினைப் போல மொத்த நகரமே அமைதியாய் இருக்கிற இந்தப் பின்னிரவின் ருசி அலாதியாய் இருக்கிறது.

மெல்ல எழுந்து ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறேன். டிசம்பர் மாதத்து ஐரோப்பியக் குளிர்காற்று முகத்திலறைகிறது .மௌனம் மட்டுமே இரவின் மொழி போலும். எங்கும் ஒரே நிசப்தம். இரவானால் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதைக் கூட நிறுத்திக் கொள்ளுமோ? எனத் தோன்றுமளவிற்கு நகரம் முழுவதும் அசைவற்றுக் கிடக்கிறது. யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதைப் போல நிலா வானத்தில் தனியே உலவிக் கொண்டிருக்கிறது. பையிலிருந்து சிதறிய சில்லறைக் காசுகளாய், நட்சத்திரங்கள் வானம் முழுதும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. சாலைகள் பனித்துளிகளால் கழுவி விடப்பட்டிருக்கின்றன. இருள் பாரபட்சமின்றி தன் ஆட்சியினை நகரம் முழுமைக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது.

இரவுகள் பயங்கரமானவை; பயமூட்டக்கூடியவை என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் பொதுவானது. குழந்தைப் பருவம் முதலே இரவு இப்படித்தான் நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. 'இரவு ஒரு புதைகுழி' என்றொரு கிரேக்கப் பழமொழி கூட உண்டு. நேற்றுவரை இந்த நம்பிக்கைக்கு நானும் விதிவிலக்கல்ல.ஆனால் இன்றைய இரவின் தோழமையான அறிமுகம் ஊறிப் போன பழைய நம்பிக்கைகளைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறது.

'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா!' என்று மகாகவியின் வரி ஒன்று உண்டு. பாரதி சொன்ன தனிமையின் சாரத்தினை, இரவுகள் மட்டுமே தரமுடியும் எனத்தோன்றுகிறது. பகலினைப் போல ஒப்பனையில்லாத இரவின் சௌந்தர்யம் எனக்குப் பிடித்திருக்கிறது.

என் மடிக்கணிணியிலிருந்து (laptop) வரும் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!' காற்றலைகளில் நிரம்பியிருந்தது. இதற்கு முன்பு எத்தனையோ முறை இதே பாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் இன்று புதிதாய் இருக்கிறது. இசைக்கு மேலும் சுவையூட்டும் கலையினை இரவு நன்றாகவே கற்றிருக்கிறது. எல்லாப் பெண்களும் பதினாறு வயதில் அழகாயிருப்பார்கள் என்பதைப் போல எல்லா பொருட்களும், விஷயங்களும் இரவில் அழகாயிருக்கின்றன.

கடிகாரத்தின் சின்ன முள் நான்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் வாய் வலிக்காமல் இன்னமும் தங்களுக்குள் எதோ ரகசியங்களை பேசியபடி இருக்கின்றன.

விஞ்ஞானக் கதைகளில் வரும் கால இயந்திரத்தைவிட வேகமாக மனம் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. பழைய அதே சமயம் இன்னும் பசுமையான நினைவுகள் மனக்கண் முன் வரிசை கட்டுகின்றன. சொந்த தேசத்தைவிட்டு 7000 மைல்கள் அப்பாலிருந்தாலும், இந்த நினைவுகள் மட்டுமே என் வேர்களை இன்னும் ஈரத்துடன் வைத்திருக்கின்றன.

இரவின் மடியில், நினைவுகளின் தாலாட்டில் எவ்வளவு நேரம் இருந்திருப்பேன் என்று தெரியவில்லை. கடற்கரையிலிருந்து சீகல் பறவைகளின் சத்தம் கேட்கிறது. இந்தப் பறவைகள்தாம் தினமும் சூரியனைத் துயிலெழுப்புகின்றன போலும். இரவு விடை பெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதுவரை இரவின் சுகந்தத்தினை ஏன் உணர்ந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமாயிருக்கிறது. இரவின் மொழி இன்றுதான் எனக்குப் புரிந்திருக்கிறது. தூங்காத ஒவ்வொரு இரவும் எனக்கு இன்னும் நிறைய சேதி தரும் போலத் தோன்றுகிறது. இரவு மிகத் தோழமையானது. இரவின் தனிமை ருசிமிக்கது.

கீழ்வானம் நன்றாக வெளுத்து விட்டது.

நான் தூங்கப் போகிறேன் !!

தர்மா