யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலே
இனிதாவதெங்கும் காணோம்
-- மகாகவி பாரதியார்.
மொழி என்பது நாகரிக வாழ்வின் உச்சம். ஒரு இனத்தை அடையாளம் காட்டக் கூடியது மொழி. ஒரு மொழியானது கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமலிருக்க, அம்மொழியைப் பேசக்கூடிய மக்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, அம்மொழியின் நீட்சியும், நெகிழும் தன்மையும், காலத்திற்கேற்ப புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் திறனும், எளிமையும் இன்றியமையாதது.
சென்ற மாதம் 'அவுட்லுக்' பத்திரிக்கையில் வந்த குறிப்பு ஒன்று கலவரமூட்டுகிறது.
பதினான்கு நாட்களுக்கு ஒரு மொழி உலகில் எங்கோ ஒரு மூலையில் இறந்து கொண்டிருக்கிறதாம். இது அழியும் தாவரங்கள், பறவைகள், மீன்களின் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாம். அந்தமானில் ஒரு மொழியை ஏழே ஏழு பேர் மட்டும்தான் பேசுகிறார்களாம். பல பழங்குடிகளின் மொழிகள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றனவாம்.
அப்படியானால் நம் தமிழ் மொழியின் நிலை ? ?
ஆறுதலளிக்கும் வகையில் ஒரு ஆய்வுக்குறிப்பு இந்தியாவில் எந்த மொழி அழிந்தாலும் இந்தியும் தமிழும் எக்காலத்தும் நிலைபெறும் என்கிறது.
அன்பரசர் இயேசு கிறிஸ்து தன் போதனைகளைச் சொன்ன ஹீப்ரு மொழி, புத்த பகவான் தன் கருத்துக்களைச் சொன்ன பாலி மொழி உட்பட எத்தனையோ பண்டைய மொழிகள் வழக்கிழந்து, வடிவிழந்து தங்கள் முகங்களைத் தொலைத்த நிலையில் இன்றும் தன் வடிவு மாறாமல் உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது நம் தமிழ்மொழி. இயல்பிலேயே வளமையும் நீட்சியும் கொண்டது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்மொழி வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி ஒப்புயர்வற்ற காப்பியங்களையும், காவியங்களையும் இயிற்றியுள்ளனர். அன்பையும், காதலையும், வாழ்க்கை நெறிகளையும் விளக்கும் கற்பனைச்செறிவு மிக்க இந்த இலக்கியங்களே தமிழன்னையின் பொக்கிஷமாகும்.
இத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களைக் கொஞ்சமும் சிதைவில்லாமல், வரும் தலைமுறைக்கு பரிமாற்றவும், எல்லோரும் எளிதில் படித்துப் பயன் பெறும் வகையிலும் தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி இணையம் வழி வழங்கும் திட்டங்களைப் பலரும் செய்து வருகின்றனர். (உதாரணம் - மதுரைத்திட்டம் )
'ஊர் கூடியிழுத்தால் தேர் நகரும்' என்பது போல, எனது பங்களிப்பாய், எனக்குப் பிடித்த தமிழ் இலக்கியங்களை எனது புரிதலின்படி உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தொடரின் நோக்கமாகும்.
இந்த வகையில், இனிவரும் பதிவுகளில் முதன் முதலாக நாம் அலசப் போகிற இலக்கியம் புகழேந்திப் புலவரின் நளவெண்பா.
நளவெண்பாவின் எளிமையும், கற்பனைச்செறிவும், உவமைச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை. அதனாலேயே, எனது முதல் முயற்சிக்கு நளவெண்பாவை நாடினேன்.
சரி, அடுத்த பதிவில் நளவெண்பாவின் கதைச்சுருக்கத்தையும், நூல் அமைப்பையும், நூலாசிரியரைப் பற்றியும் பார்க்கலாம்.
தொடரும் பதிவுகளில் ஒவ்வொரு வெண்பாவின் பொருளையும், சுவையையும் விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள்.
மீண்டும் சந்திப்போம் !!
No comments:
Post a Comment