Sunday, December 16, 2007

இரவின் ருசி !!!

ஏனோ ! தெரியவில்லை. இன்றைய இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை, அல்லது தூக்கம் பிடிக்கவில்லை. நாள்காட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை என்ற நல்ல செய்தியைச் சொல்லியது. பொதுவாகவே எனது சனிக்கிழமை இரவுகள் சற்று நீளமானவை. ஆனாலும் இன்று போல் நள்ளிரவு தாண்டியும் நீண்டதில்லை.

எத்தனையோ நாட்கள், பள்ளித்தேர்வுகளுக்காகவும், அலுவலகப் பணிச்சுமையினாலும் நள்ளிரவுவரை விழித்திருக்கிறேன். அதிகபட்சம் அதிகாலை 2 மணிவரை. அதற்குள்ளாகவே நித்திரைதேவியின் அருள் பூரணமாகக் கிடைத்திருக்கும். நள்ளிரவைத் தாண்டிய பின்னிரவின் முகம் நேற்றுவரை நான் அறியாதது.

"விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது" என்ற புத்தரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து போகின்றன. இதுவரை உறங்கியிருந்த ஒவ்வொரு இரவும் புகையினைப் போல காற்றில் நழுவிக் கரைந்துவிட்டிருக்கின்றது. உறக்கமற்ற இந்த நீண்ட இரவு ஒரு தனித்துவமான சுகானுபவத்தைத் தருகிறது. குளத்தினுள் எறியப்பட்ட கல்லினைப் போல மொத்த நகரமே அமைதியாய் இருக்கிற இந்தப் பின்னிரவின் ருசி அலாதியாய் இருக்கிறது.

மெல்ல எழுந்து ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறேன். டிசம்பர் மாதத்து ஐரோப்பியக் குளிர்காற்று முகத்திலறைகிறது .மௌனம் மட்டுமே இரவின் மொழி போலும். எங்கும் ஒரே நிசப்தம். இரவானால் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதைக் கூட நிறுத்திக் கொள்ளுமோ? எனத் தோன்றுமளவிற்கு நகரம் முழுவதும் அசைவற்றுக் கிடக்கிறது. யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதைப் போல நிலா வானத்தில் தனியே உலவிக் கொண்டிருக்கிறது. பையிலிருந்து சிதறிய சில்லறைக் காசுகளாய், நட்சத்திரங்கள் வானம் முழுதும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. சாலைகள் பனித்துளிகளால் கழுவி விடப்பட்டிருக்கின்றன. இருள் பாரபட்சமின்றி தன் ஆட்சியினை நகரம் முழுமைக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது.

இரவுகள் பயங்கரமானவை; பயமூட்டக்கூடியவை என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் பொதுவானது. குழந்தைப் பருவம் முதலே இரவு இப்படித்தான் நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. 'இரவு ஒரு புதைகுழி' என்றொரு கிரேக்கப் பழமொழி கூட உண்டு. நேற்றுவரை இந்த நம்பிக்கைக்கு நானும் விதிவிலக்கல்ல.ஆனால் இன்றைய இரவின் தோழமையான அறிமுகம் ஊறிப் போன பழைய நம்பிக்கைகளைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறது.

'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா!' என்று மகாகவியின் வரி ஒன்று உண்டு. பாரதி சொன்ன தனிமையின் சாரத்தினை, இரவுகள் மட்டுமே தரமுடியும் எனத்தோன்றுகிறது. பகலினைப் போல ஒப்பனையில்லாத இரவின் சௌந்தர்யம் எனக்குப் பிடித்திருக்கிறது.

என் மடிக்கணிணியிலிருந்து (laptop) வரும் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!' காற்றலைகளில் நிரம்பியிருந்தது. இதற்கு முன்பு எத்தனையோ முறை இதே பாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் இன்று புதிதாய் இருக்கிறது. இசைக்கு மேலும் சுவையூட்டும் கலையினை இரவு நன்றாகவே கற்றிருக்கிறது. எல்லாப் பெண்களும் பதினாறு வயதில் அழகாயிருப்பார்கள் என்பதைப் போல எல்லா பொருட்களும், விஷயங்களும் இரவில் அழகாயிருக்கின்றன.

கடிகாரத்தின் சின்ன முள் நான்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் வாய் வலிக்காமல் இன்னமும் தங்களுக்குள் எதோ ரகசியங்களை பேசியபடி இருக்கின்றன.

விஞ்ஞானக் கதைகளில் வரும் கால இயந்திரத்தைவிட வேகமாக மனம் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. பழைய அதே சமயம் இன்னும் பசுமையான நினைவுகள் மனக்கண் முன் வரிசை கட்டுகின்றன. சொந்த தேசத்தைவிட்டு 7000 மைல்கள் அப்பாலிருந்தாலும், இந்த நினைவுகள் மட்டுமே என் வேர்களை இன்னும் ஈரத்துடன் வைத்திருக்கின்றன.

இரவின் மடியில், நினைவுகளின் தாலாட்டில் எவ்வளவு நேரம் இருந்திருப்பேன் என்று தெரியவில்லை. கடற்கரையிலிருந்து சீகல் பறவைகளின் சத்தம் கேட்கிறது. இந்தப் பறவைகள்தாம் தினமும் சூரியனைத் துயிலெழுப்புகின்றன போலும். இரவு விடை பெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதுவரை இரவின் சுகந்தத்தினை ஏன் உணர்ந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமாயிருக்கிறது. இரவின் மொழி இன்றுதான் எனக்குப் புரிந்திருக்கிறது. தூங்காத ஒவ்வொரு இரவும் எனக்கு இன்னும் நிறைய சேதி தரும் போலத் தோன்றுகிறது. இரவு மிகத் தோழமையானது. இரவின் தனிமை ருசிமிக்கது.

கீழ்வானம் நன்றாக வெளுத்து விட்டது.

நான் தூங்கப் போகிறேன் !!

தர்மா

4 comments:

Archana said...

Nice....

Henry Fonseka said...

Yela Maadu,

Nalla irruku.

Unknown said...

good dharma anna.

nagarajan said...

Well!
A sleep less night has brought out the poet sleeping in you.
I did not know dark nights are beautiful to a lonely young man.
Even Bhatathi wanted a beautiful maiden for company.

By the way, I had difficulty with the fonts. What is the porblem?

Keep posting your thoughts.
Nagarajan